செம்மணிப் பகுதியில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மனித மண்டை ஓடு உள்ளிட்ட மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
1998 இல் யாழ்ப்பாணத்தில் காணாமற்போன நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கொல்லப்பட்டு செம்மணியிலேயே புதைக்கப்பட்டார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக நடந்த வழக்கில் செம்மணியின் பல இடங்களிலும் தோண்டி 15 மனித உடல்களின் எச்சங்கள் முழுமையான எலும்புக்கூடுகளாகவும் எச்சங்களாகவும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
அப் பகுதியில் நேற்றும் மனித எச்சம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து யாழ். நகரம் பரபரப்பானது.
செம்மணி வீதியில் நீர்த்தாங்கி அமைக்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதற்காக நேற்று இயந்திரம் மூலம் நிலம் தோண்டப்பட்டது. அப்போது மண்டை ஓடு, மற்றும் எலும்பு எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன.
நிலம் அகழும் பணி நிறுத்தப்பட்டு யாழ்ப்பாண காவல்துறைக்குத் தகவல் வழங்கப்பட்டது.
இன்று நீதிமன்ற உத்தரவைப் பெற்று அந்த எலும்பு எச்சங்களை மீட்கவுள்ளதாத் தெரிவித்தனர். மேலும் அங்கு எலும்பு எச்சங்கள் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.
சந்திரிகா ஆட்சிக்காலத்தில் சிறீலங்காப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட மாணவி கிரிசாந்தி கொலை வழக்குடன் அன்று வெளிச்சத்துக்கு வந்தது செம்மணிப் புதைகுழி.
கிருசாந்தி கொலைக் குற்றவாளி சோமரத்ன ராஜபக்சவே செம்மணிப் புதை குழி தொடர்பான உண்மைகளை வெளியே சொன்னார்.
செம்மணி, அரியாலை, கொழும்புத்துறை ஆகிய இராணுவ முகாம்களில் கொலை செய்யப்பட்டவர்களே செம்மணி வெளியில் புதைக்கப்பட்டிருந்தனர் என்று கூறப்பட்டது. பின்னர் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
18 ஆண்டுகளின் பின்னர் செம்மணிப் பகுதியில் மீண்டும் மண்டை ஓட்டுடன் எலும்பு எச்சங்கள் மீண்டும் நேற்று இனங்காணப்பட்டுள்ளன. இப்பகுதியில் முன்னர் சிறீலங்கா இராணுவத்தினரின் காவலரண் இருந்தது குறிப்பிடத்தக்கது.