ஸ்ரீலங்கா கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தமது பூர்வீக நிலங்களில் தற்காலிக கொட்டில்களை அமைக்கும் பணிகளை முள்ளிக்குளம் கிராம மக்கள் இரண்டாவது நாளாக இன்றும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், சட்டவிரோத காடழிப்பு இடம்பெறுவதாக தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
2007 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா கடற்படையினரினால் மூன்று நாட்களில் மீண்டும் மீள் குடியேற்றம் செய்யப்படுவீர்கள் என்ற பொய்யான வாக்குறுதி வழங்கப்பட்டு முள்ளிக்குளம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
அவ்வாறு வெளியேற்றப்பட்ட முள்ளிக்குளம் மக்கள் யுத்தகாலத்தில் உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில், வசித்து வந்த நிலையில், யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் முள்ளிக்குளம் கிராமத்திற்கு அருகில் உள்ள மலங்காடு, காயாக்குளி ஆகிய காட்டு பகுதிகளில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தற்காலிக வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்தனர்.
இதனையடுத்து தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த வருடம் மார்ச் மாதம் 23 ஆம் திகதி முதல் கிராமத்தின் நுழைவாயிலில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட மக்கள் போராட்டத்தினால் பொது மக்களுக்கு சொந்தமான ஒரு பகுதி காணிகள் ஸ்ரீலங்கா கடற்படையினரால் 10 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டது.
காணிகள் பற்றைக்காடுகளாக காணப்பட்டமையினால் மக்கள் மீள்குடியேற்ற முடியாத நிலை ஏற்பட்டதுடன் முள்ளிக்குளம் ஆலயத்தில் தற்காலிகமாக குடியமர்ந்தனர்.
இந்த நிலையில் பொதுமக்களுக்கு சொந்தமான வீடுகளில் ஸ்ரீலங்கா கடற்படையினரின் குடும்பங்கள் வசிப்பதால் அவர்களை வெளியேற்ற ஒரு தொகை பணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கடற்படை கோரியிருந்ததுடன்
குறித்த வீடுகளை விடுவிப்பதற்கு 8 மாத கால அவகாசம் வழங்குமாறு கடற்படை கோரியிருந்தது.
எனினும் கடற்படையினரால் கோரப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்து ஒரு வருடங்கள் நிறைவடைந்துள்ளதுடன், மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட்டவில்லை.
இந்த நிலையிலே, முள்ளிக்குளம் கிராம மக்கள் ஸ்ரீலங்கா கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தமது பூர்வீக நிலங்களை துப்பரவு செய்து, தற்காலி வீடுகளை அமைக்கும் செற்பாடுகளை நேற்று புதன்கிழமை ஆரம்பித்தனர்.
நேற்று காலை 8.30 மணியளவில் சென்ற காணி உரிமையாளர்கள் முள்ளிக்குளம் பங்குத்தந்தை பி.லோறன்ஸ் லியோனின் தலைமையில் அயல் பங்கு தந்தையர்களின் உதவிகளுடன் இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தமது பூர்வீக நிலங்களை துப்பரவு செய்து, தற்காலி வீடுகளை அமைக்கும் செற்பாடுகளை இன்று இரண்டாவது நாளாக மேற்கொண்டு வருகின்ற நிலையில் சிரமதானப்பணிகளுக்கு கடற்படையினர் எவ்வித இடையூரையும் ஏற்படுத்தவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் – விடுவிக்கப்பட்ட பகுதியின் குறிப்பிட்ட சில இடங்களுக்குள் மட்டுமே மக்களை நடமாட கடற்படையினர் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்களினால் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்படும் இடத்திற்கு இன்று காலை 11.00 மணியளவில் விரைந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், இங்கு சட்டவிரோத காடழிப்பு இடம்பெறுவதாக தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் முள்ளிக்குளம் பங்குத்தந்தை பி.லோறன்ஸ் லியோன் சிரதமான பணிகள் இடம்பெறும் பகுதி பொது மக்களுக்கு சொந்தமானது எனவும், குறித்த பகுதி கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் விடுவிக்கப்பட்ட பகுதி எனவும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
முள்ளிக்குளத்தில் இடம்பெறும் சிரமதான பணி தொடர்பாக மாவட்ட செயலகத்தினால் தமக்கு அறிவிக்கப்படவில்லை என வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அருட்தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மக்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் எனவும், இவ்வாறு இடையூறு விளைவிக்கப்படும் சந்தர்ப்பத்தில் உரிய அதிகாரிகளை நாடுவதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் முள்ளிக்குளம் பங்குத்தந்தை பி.லோறன்ஸ் லியோன் தெரிவித்துள்ளர்.