ஐரோப்பிய ஒன்றியம் அல்ல முழு உலகமே எதிர்த்தாலும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவோம் என்று சிறீலங்கா அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் தூக்குத் தண்டனை விதிப்பது தொடர்பாக சிறீலங்கா அரசு எடுத்துள்ள தீர்மானத்துக்கு, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்குல நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
நீதித்துறையினால் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு தூக்குத் தண்டனையை வழங்குவது எவ்வித மனித உரிமை மீறல் செயற்பாடாகாது என்பதை மேற்குலக நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் புரிந்துகொள்ள வேண்டும். எமது நாட்டில் முக்கிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அதற்கு எதிராக மேற்குலக நாடுகள் அழுத்தங்களை பிரயோகிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
அரச தலைவரின் தீர்மானத்துக்கு நாட்டு மக்களும், பௌத்த மதத் தலைவர்களும், அரசியல்வாதிகளும் ஆதரவு வழங்கியுள்ளனர். ஆகவே அரசு நாட்டு மக்களின் விருப்பங்களுக்கு அமைய செயற்பட வேண்டுமே தவிர பன்னாடு நாடுகளின் விருப்பத்துக்கு அல்ல எனவும் சிறீலங்கா அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.