கைபர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 80 தீவிரவாதிகள் பலி!

0
679

pakistan-20130201-1பாகிஸ்தானின் கைபர் பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன், 100 பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானில் ஜனநாயக அரசை வீழ்த்தி விட்டு கடுமையான இஸ்லாமிய ஆட்சியை அமல்படுத்தும் நோக்கில், தெக்ரிக்-இ-தலீபான் (பாகிஸ்தான் தலீபான்) அமைப்பு போராடி வருகிறது. ஆப்கானிஸ்தான் தலீபான் இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, பாகிஸ்தானின் வடமேற்கில் ஆப்கானிஸ்தான் எல்லையோர பகுதியான வஜிரிஸ்தான் உள்ளிட்ட மண்டலங்களில் தளங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது.

தெற்கு வஜிரிஸ்தான் மற்றும் கைபர் மண்டலங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த 2009-ம் ஆண்டு முதல் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு மேற்கே கைபர் மண்டலத்துக்கு உட்பட்ட திரா பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளின் ஏராளமான முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதியை குறி வைத்து கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன.

இதற்கு தீவிரவாதிகளும் பதிலடி கொடுத்து வருவதால், அப்பகுதியில் கடந்த 4 நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அதிரடி தாக்குதலில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன், சுமார் 100 பேர் காயமடைந்தனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அனைவரும் தெக்ரிக்-இ-தலீபான் மற்றும் அதனுடன் தொடர்புடைய லஷ்கர்-இ-இஸ்லாம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த பகுதியில் மறைந்திருக்கும் அனைத்து தீவிரவாதிகளையும் ஒழிக்கும் வரை முழுவீச்சில் தாக்குதல் தொடரும் என பாகிஸ்தான் ராணுவ ஊடகப்பிரிவு தலைவரான ஜெனரல் அசிம் பஜ்வா, தனது ‘டுவிட்டர்’ வலைதளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த தாக்குதலின் போது பாகிஸ்தான் தலீபான் இயக்க தலைவரான மவுலானா பஸ்லுல்லா, கைபர் மண்டலத்தில் இருந்ததற்கான தெளிவான ஆதாரம் கிடைத்திருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலில் சிக்கிய அவரது உடல் நிலை குறித்து பல்வேறு யூகங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதைப்போல தெற்கு வஜிரிஸ்தான் மண்டலத்திலும் ராணுவ தாக்குதல் நடந்து வருவதாகவும் உளவுத்தகவல்கள் கூறியுள்ளன.

இதற்கிடையே திரா பள்ளத்தாக்கு பகுதியில் ராணுவ வீரர்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய மற்றொரு கண்ணிவெடி தாக்குதலில் ராணுவ அதிகாரி உள்பட 7 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here