முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் மதவாளசிங்கன் குளத்திற்கு அருகில் புதிதாக ஒரு மதுபான சாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மதுபான சாலை யாருடையது? யார் இதற்கு அனுமதி கொடுத்தது? என்பது தொடர்பில் கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் அவர்களினால் கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த கேள்விக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் யாரிடமும் அனுமதி பெறப்படாமல் இயங்குவதாக தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த மதுபானசாலை அமைந்துள்ள இடம் இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி எனவும் இது ஏற்கனவே இராணுவத்தால் உணவகமாக பயன்படுத்தபட்டது எனவும் கருத்து தெரிவிக்கபட்டது.
உடனடியாக இந்த மதுபான சாலையின் அனுமதி தொடர்பில் பரிசீலித்து மூடுவதற்கான நடவடிக்கையினை எடுக்கும்படி இணைத் தலைவர்களில் ஒருவரான பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களால் முல்லைத்தீவு மாவட்ட காவல்துறைத் தலைமை அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.