ஆளும் ஐக்கிய தேசிய கட்சியும் எதிர்க்கட்சியாக வுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நேற்று தேசிய அரசாங்கத்தை அமைத்தன.
பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் நேற்றைய தினம் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்த தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது.
அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்துகொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 26 பேர் அமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சர்களாகவும் பிரதியமைச்சர்களாகவும் பதவியேற்றுள்ளனர்.
அதன்படி ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான அரசாங்கத்தின் மொத்த அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கை 77ஆக உயர்வடைந்துள்ளது. அமைச்சரவை அமைச்சர்கள் 40 பேரும் இராஜாங்க அமைச்சர்கள் 14 பேரும் பிரதியமைச்சர்கள் 23 பேரும் பதவியேற்றுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 11 பேர் அமைச்சர்களாகவும் 5 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும் 10 பேர் பிரதியமைச்சர்களாகவும் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக்கொண் டனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் எவரும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கவில்லை. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி. சில்வா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம்ஜயந்த செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுள்ளனர்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி விருப்பம் காட்டாமல் இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்றுவந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாகவே தற்போது தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கவேண்டும் என்ற கலந்துரையாடல்கள் புதிய அரசாங்கம் உதயமானதிலிருந்து இடம்பெற்றுவந்தன.
தனது அரசாங்கத்தில் வந்து இணைந்துகொண்டு தேசிய அரசாங்கத்தை அமைக்குமாறு சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில வாரங்களுக்கு முன்னர் கட்டுநாயக்கவில் இடம்பெற்ற கட்சியின் கருத்தரங்கில் அழைப்பு விடுத்திருந்தார்.
அந்த அழைப்பு குறித்து பரிசீலித்த சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு முடிவெடுத்தனர். அந்த முடிவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவுக்கு அறிவித்த நிலையில் மத்திய குழு அதனை அங்கீகரித்தது.
எனினும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி அந்தளவு விருப்பம் காட்டாமல் இருந்த வந்த நிலையிலேயே ஜனாதிபதிக்கு பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றது.
அதன் பின்னர் சிறிலங்கா சுதநதிரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க தீர்மானித்த நிலையில் நேற்று தேசிய அரசாங்கம் உதயமானதுடன் சுதந்திரக் கட்சியின் 26 பேர் அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டனர்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர் பல தடவைகள் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிகளை எடுத்தபோதும் அது கைகூடவில்லை. அந்தவகையில் தற்போது தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற நாட்டின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டிய பின்னர் நாட்டில் ஐக்கிய தேசிய கட்சி தரலைமையிலான பெரும்பான்மை பலமற்ற அரசாங்கமே ஆட்சியில் இருந்து வந்தது. எனினும் தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அமைச்சரவையில் இணைந்துகொண்டுள்ள நிலையில் பெரும்பான்மை அரசாங்கம் பதவிக்கு வந்துள்ளது.
தற்போது இவ்வாறு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சி கூறிவருகின்ற நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படுமா என்ற கேள்வி எ ழுந்துள்ளது.
ஏப்ரல் 23 ஆம் திகதி பாராளுமன்றம கலைக்கப்படுமா அல்லது சில மாதங்களுக்கு நீடிக்கப்படுமா? அல்லது எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு வரை பாராளுமனறம் நீடிக்கப்படுமா என்ற கேள்வியும் அரசியல் களத்தில் எழுந்துள்ளது.