தாய்லாந்து குகையில் சிக்கியவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். குகையில் சிக்கிய 12 சிறுவர்கள், 1 பயிற்சியாளர் உட்பட அனைவரும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். மூன்று நாட்களாக மீட்பு பணி நடைபெற்றது.
சிக்கலான குகைகளில் ஒன்றான தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகை என்ற மிகவும் குறுகலான குகைக்குள் தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள். கடந்த 17 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருந்தனர். சென்ற வாரம்தான் அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு பணி முழு வெற்றி பெற்றுள்ளது.
ஒரு நாளுக்கு நான்கு பேரை மட்டுமே மீட்க முடியும் என்று மீட்பு குழு கூறியது. இதற்கு அவர்கள் காரணமும் சொல்லி இருக்கிறார்கள். அதன்படி, ஒரு நாளில் நான்கு பேர் , மற்றும் மீட்பு குழுவினர் பயன்படுத்தும் அளவிற்கு மட்டுமே ஆக்சிஜன் சிலிண்டர்களை உள்ளே வைக்க முடியும். பின் இரவோடு இரவாக மீண்டும் புதிய சிலிண்டர்களை வைக்க வேண்டும். இதனால் இன்று வரை மீட்பு பணி தொடர்ந்தது.
இந்த நிலையில் இந்த குகைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது . இனி இந்த குகைக்குள் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மிகவும் ஆபத்தான பகுதிகளில் இதுவும் ஒன்று என்ற பெயரை இது பெற்றுள்ளது. இனி இந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.