இலங்கை – இந்திய மீனவர்களின் மூன் றாவது கட்டப் பேச்சுவார்த்தை நாளை 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் நாளை மறுதினம் 25ஆம் திகதி புதன்கிழமையும் சென்னையிலுள்ள மீனவத்துறை கேட்போர் கூடத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக 16 பேர் கொண்ட குழு இன்று சென்னை செல்கின்றது.
இன்று காலை 7.00 மணிக்கு சென்னை புறப்படும் யூ. எல். 121 ரக ஸ்ரீலங்கன் விமான சேவை விமானத்தில் இலங்கை குழுவினர் செல்கின்றனர். புறப்படுவதற்கு முன்னதாக பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் குழுவினர் கடற்றொழில் அமைச்சர் ஜோஸப் மைக்கல் பெரேராவை அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறிப்பாக தமிழகத் தரப்பில் என்னேரமும் கூறப்படும் பாரம்பரிய கடல் பிரதேசம் என்ற விடயத்தில் விட்டுக் கொடுப்பு கிடையாது என்பதுடன் 1974 ஆம் ஆண்டு சர்வதேச கடல் எல்லை நிர்ணயத்துடன் பாரம்பரிய கடல் எல்லை என்பது இல்லை என்பதை தமிழக தரப்பிற்கு வலியுறுத்திக் கூறுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையின் முக்கிய அம்ச மாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிவந்து இழுவைப்படகுமற்றும் தடைசெய்யப்பட்டுள்ள வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் வட பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மற்றும் வட பகுதி மீனவர்களின் வள்ளங்கள் வலைகள் அழிக்கப்பட்டமை போன்றவற்றுக்கு தமிழக அரசிடமிருந்து நஷ்டஈடு கோருவது என்றும் முடிவு செய்யப்பட் டுள்ளது.
இலங்கைக் கடற் படிப்பிற்குள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தினங்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக தரப்பில் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஒருநாள் அல்ல ஒரு நிமிட நேரமேனும் இலங்கை கடற்பரப்பிற்குள் தமிழக மீனவர்களுக்கு அனுமதியளிக்க முடியாது என்பதையும் தமிழக அரசிடம் வலியுறுத்திக் கூறுவது என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது.