நல்லாட்சி அமைப்பதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் பதவிகளைப் பெற்றுக்கொள்வதிலும், பலத்தை தக்கவைத்துக் கொள்வதிலுமேயே கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டி வருகிறது.
தற்பொழுது நாட்டில் நடை பெறுவது நல்லாட்சி அல்ல என ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்னர் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கிக்கொண்டு, நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள், மக்களை மறந்து தமது பலத்தை தக்க வைத்துக் கொள்வதிலும், பதவிகளைப் பெற்றுக்கொள்வதிலுமேயே அக்கறை காட்டுகின்றனர். வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வில்லையென அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு நேற்றையதினம் அமைச்சரவை அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. இது தொடர்பாகக் கேட்டபோதே விஜித ஹேரத் இவ்வாறு கூறினார்.
அமைச்சரவை மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் என தேர்தல் காலத்தின்போது கூறப்பட்டிருந்தது. எனினும் இது மீறப்பட்டுள்ளது. நூறுநாள் வேலைத் திட்டத்தில் பல்வேறு உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை நிறை வேற்ற வேண்டிய காலங்களும் கடந்துவிட்டன.
வழங்கிய உறுதிமொழிகளை நிறை வேற்றும் பணிகளில் அக்கறை செலுத்தப் படவில்லை. மாறாக பதவிகளைப் பெற்றுக்கொள்வதும், அமைச்சுக்களைப் பெற்றுக்கொள்வதும் மும்முரமாக நடைபெறுகிறது. இது நல்லாட்சியில்லை. மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு தண் டனை வழங்கப்படும், விசாரணை நடத்தப்படும் எனக் கூறினார்கள். எதுவும் நடைபெறவில்லை. மக்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.