பிரான்சு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான யூலை 05 . தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (05.07.2018) பரிசு 15 இல் பகல் 15.00 மணிக்கு இடம் பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை பிரான்சு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திருமதி நித்தி முகுந்தி அவர்கள் ஏற்றி வைத்தார்.
03.07.2008 அன்று மன்னாரில் இடம் பெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்ரினன் தமிழ்ப் பிரியனின் சகோதரர் தற்கொடையாளரினதும், கரும்புலி கப்படன் மில்லர், கடற்கரும்புலி கப்டன் அங்கயர்கண்ணி ஆகியோரின் உருபடத்திற்கு சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் சுடர்வணக்கமும், மலர் வணக்கமும் செலுத்தினர்.
அரங்க நிகழ்வுகளாக கவிதை, பேச்சு, தமிழீழ விடுதலைக்கானங்கள் இசைக்கப் பட்டதுடன், பரிசு 15 தமிழ்ச்சோலை மாணவிகளினதும், இவிறி தமிழ்ச் சோலை மாணவியினதும், குசன்வீல் தமிழ்ச்சோலை மாணவிகளினதும் தமிழீழ எழுச்சிப்பாடலுக்கான நடனமும் இடம் பெற்றது.
பிரான்சுக்கு சுற்றுலா வந்திருந்த வேளையில் எழுச்சி நிகழ்வு குறித்து தெரிந்து கொண்ட மலேசிய தமிழ் உணர்வாளர்களும் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் தமிழ் உணர்வாளர் திரு கதிரவன் அவர்கள் உரையாற்றும் போது தமிழர் என்ற உணர்வே உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பதாகத் தெரிவித்தார்.
பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் சார்பில் உரையாற்றிய திரு மோகனதாஸ் அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகள் குறித்தும் எதற்காக தடைநீக்கிகள் என நிகழ்வு நடத்தப் படுகின்றது என்பதையும் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு படைப்பிரிவே கரும்புலிகள் படையணி என்பதையும் சுவிஸ் நாட்டில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப் பட்டது குறித்தும் ஏனைய நாடுகளிலும் இதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இறுதியாக நம்புங்கள் தமிழீழ் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.