வெளிநாடுகளிலிருந்து வருகின்ற தமிழர்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் சம்பவங்கள் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான நிலையில் புலம்பெயர்ந்தவர்கள் தாராளமாக நாடு திரும்பலாமென்று அழைப்பது அர்த்தமற்ற செயலாகும் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
புலம்பெயர் தமிழ் மக்கள் நாடு திரும்பலாம் என ஜனாதிபதியும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் விடுத்த அறிவிப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தாராளமாக நாடு திரும்பலாம். இங்கு முதலீடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளலாம் என ஜனாதிபதியும், புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை குறித்து மீளாய்வு செய்யப்படுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் கூறியிருக்கின்ற போதும் அவர்கள் அச்சமின்றியும் சுதந்திரமாகவும் வருவதற்குரிய உத்தரவாதத்தை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும்.
அண்மைக் காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்த 10இற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் கனடாவிலிருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, பிள்ளை ஆகிய மூவரும் தடுத்து வைக்கப்பட்டு நான்கு மணி நேரம் விமான நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் பின்பு அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் தமது சொந்த ஊரான யாழ்ப்பாணம் சென்ற சமயம் அவர்களின் பின்னால்
புலனாய்வு பிரிவினர் சென்று பல இடைஞ்சல்களைக் கொடுத்துள்ளனர். இதனால் உடனடியாகவே அவர்கள் நாட்டை விட்டுச் சென்று விட்டார்கள்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் இலட்சக்கணக்கான பணத்தை செலவு செய்து தம் தாய் நாட்டுக்கு ஆவலுடன் வந்தால் அவர்கள் நிந்திக்கப்படுகிறார்கள். புலனாய்வுப் பிரிவினரால் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். விமானம் நிலையம் வருகின்ற
ஒவ்வொருவரையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதும் விசாரிப்பதும் கைது செய்வதும் பணம் பறிப்பதும் சர்வசாதாரணமாகவே நடைபெறுகிறது. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருகின்ற தமிழர்கள் கூட விமான நிலையத்தில் வைத்து விசாரிக்கப்படுகிறார்கள்.
எனவே இலங்கையரசாங்கமானது தனது நடைமுறைகளை மாற்றாமல் புலம் பெயர்ந்தவர்களை வாருங்கள் அவர்கள் தாராளமாக நாடு திரும்பலாம். புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை குறித்து மீளாய்வு செய்யப்படும் என்று கூறுவதெல்லாம் அர்த்தம் அற்றதாகும்.
இன்று வெளிநாடுகளில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழுகிறார்கள். இவர்கள் இலங்கை வரும்போது கைது செய்வதானால் எத்தனை ஆயிரம் மக்களை கைது செய்ய முடியும். எனவே தான் இலங்கை அரசாங்கமானது இவ்வகை நிலைமைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்து, எவரும் வரலாம் கைது செய்யப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை வழங்க வேண்டும்.