இலங்கையின் வங்குரோத்து அரசியலை வெளுத்து வாங்கும் அனந்தி.!

0
500

 

ஶ்ரீலங்கா, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுப்பதானது ஜனநாயகத்தினை மீறும் செயற்பாடு என்பதுடன் ஒரு பெண் அரசியல்வாதியை திட்டமிட்டு நசுக்குகின்ற செயற்பாடாகவே இதனை கருத வேண்டும் என வடமாகாண மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அரசியலில் பெண்கள் அதிகம் ஈடுபட வேண்டும் என பிரசாரம் மேற்கொண்டு வரும் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் பெண் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை நசுக்கிய வருகின்றனர். இதற்கு சிறந்த உதாரணமாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உர‍ை தொடர்பில் ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் அரசியல் கட்சிகளும் கடும்போக்கு அமைப்புக்களினதும் செயற்பாடுகளை குறிப்பிடலாம்.

இனப்படுகொலையை அரங்கேற்றி போர் வெற்றிப் பெருமிதத்துடன் தமிழ் மக்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்கிய ராஜபக்ஷவினருக்கு எதிராக தமிழ் மக்கள் தமது ஆணையை பயன்படுத்தினார்கள். அந்த ஆணையைப் பெற்ற அரசாங்கமும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது.

அதன்படி தற்போது மூன்றாண்டுகள் கடந்துள்ள நிலையில் நல்லாட்சியை உருவாக்கப்போவதாக கூறி ஆட்சிப்பீடத்தில் அமர்ந்த இரு பிரதான கட்சித்தலைவர்களாலும் எதனையும் செய்ய முடியாதுள்ளது.

இவ்வாறான நிலையில் யுத்த பாதிப்புக்கள் ஒரு புறமிருக்கையில் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத அளவிற்கு வடக்கில் அச்சமான சூழலொன்றே நிலவி வருகின்றது.

அந்த வகையில் கணவனை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த சிறுவர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சிறார்கள், கொலை செய்யப்படும் சிறார்கள் இப்படி பட்டியல் நீண்டுகொண்டு செல்கின்றது. இவற்றின் வலிகளை இராஜாங்க அமைச்சர் விஜகலா நேரில் பார்த்துள்ளார். அதனை அவர் பெண் என்ற அடிப்படையில் உணர்ந்துள்ளார்.

எனவே அவர்களின் எதிர்காலத்துக்கு ஏதாவது செய்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றார் எனினும் அவர் பெண் என்ற காரணத்தினால் மேற்கண்ட பணிகளை முன்னெடுத்து செல்வதற்கு பல தடைகள் உருவாக்கப்படுகிறது. இவ்வாறான பல்வேறு நெருக்கடியின் காரணமாக ஏற்பட்ட ஆதங்கத்தினாலேயே விடுதலைப்புலிகளை அவர் நினைவு படுத்தியுள்ளார்.

ஆகவே விஜயகலா மகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுப்பது என்பது ஜனநாயகத்தினை மீறும் செயற்பாடாகும் என்பதோடு ஒரு பெண் அரசியல்வாதியை திட்டமிட்டு நசுக்குகின்ற முயற்சியாகவே இதனை பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here