சுன்னாகம் பிரதேசத்தில் காணப்பட்ட எண்ணெய்க்கசிவு வலி. கிழக்கு கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவையும் ஆக்கிரமித்துள்ளது. வலி. கிழக்கில் உள்ள கிணறுகளில் எண்ணெய் படிவு கலந்திருப்பதால் 30 க்கும் மேற்பட்ட நீர்த்தொட்டிகள் நிறுவப்பட்டு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் இது விஸ்தரிக்கப்படவுள்ளது.
சுன்னாகம் மின்சார நிலைய கழிவு எண்ணெய் நிலக்கீழ் நீரில் கலந்திருப்பதால் குடிநீர் பிரச்சினை வலி. தெற்கு மற்றும் வலி. வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது. இது தற்பொழுது வலி. கிழக்கு கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவையும் அச்சுறுத்தத்தொடங்கியுள்ளது.
வலி. கிழக்கு கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் உரும்பிராய், ஊரெழு, நீர்வேலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிணறுகளில் எண்ணெய் படிவுகள் கலந்திருப்பதோடு இருபாலையிலும் தென்படுவதாக கூறப்படுகின்றது.
வலி. கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் குடிநீர் விநியோகத்துக்கு நீர் பெற்று வந்த இருபாலையிலுள்ள கிணற்றில் எண்ணெய் படிவு ஏற்பட்டிருப்பதால் அந்தக் கிணற்றில் இருந்து குடிநீர் பெறுவது கைவிடப்பட்டுள்ளது. நீலக்கீழ் நீர்பெறுவதற்கு தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளில் [குழாய்க்கிணறு] பெரும்பாலும் கழிவு எண்ணெய்க் கலப்பு தெரிவதாக கூறப்படுகின்றது.
பொதுமக்கள் தமது கிணறுகளின் நிலை தொடர்பாக அறிந்து கொள்ள நீரை பரிசோதிப்பதற்கு விரும்பிய போதிலும் உரிய முறையில் நீரை பரிசோதித்து அதன் அறிக்கையை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.