நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மலைப்பாதையில் சுற்றுலா வாகனம் 15௦ அடி பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சென்னையை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை குண்டூர் நாடு பகுதியில் நேற்று மாலை சென்னை-ஆவடியை சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்களின் சுற்றுலா வாகனம் கொல்லிமலை இலங்கியம்பட்டி மலைச்சாலையில் வந்துகொண்டிருக்கும்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் 15௦ அடி பள்ளத்தில் அந்த வாகனம் கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் சுற்றுலா வாகனத்தில் வந்த கண்ணதாசன், அவரது மனைவி ஸ்ரீலதா, இவர்களது மகள் வைஷ்ணவி, உறவினர் விஜயகுமார் ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த நாமக்கல் தீயணைப்பு-மீட்பு பணிகள் துறை, காவல் துறையினர் சம்பவ இடம் சென்று 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடல்களை மீட்டு நாமக்கல் மாவட்ட அரசினர் தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
விபத்தில் வாகன ஓட்டுனர் சித்தார்த், கண்ணதாசனின் மகன் ஆனந்தவிஷ்ணு ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மற்றொரு உறவினர் ராஜலட்சுமி படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்தவர்களை நாமக்கல் மாவட்ட அரசினர் தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வ.தட்சிணாமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஆர்.சுப்புலட்சுமி, கோட்டாட்சியர் எம்.கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.