ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளுக்கு அமைய, உலக நீர் தினம் கடந்த 18 வருடங்களாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
பிரேஸிலின் றியோ டி ஜெனிரோ நகரில் 1992ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுசூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத் தொடரில் உலக நீர் தினத்தை அனுஷ்டிக்க தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய, ஆண்டுத் தோறும் மார்ச் மாதம் 22ஆம் திகதி உலக நீர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
நீர்வளத்தின் ஒட்டுமொத்த திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்தி,அதிகரித்து வரும் நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது என அன்றைய ஐ.நா கூட்டத் தொடரில் தீர்மானிக்கப்பட்டது.
கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய நகர் பகுதிகளுக்கு 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் முதற்தடவையாக குழாய் நீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் 1960ஆம் ஆண்டுகளின் பின்னர் நாட்டின் அனைத்து நகர் பகுதிகளுக்குமான குழாய் நீர் விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த குழாய் மூலமான நீ்ர் விநியோகத்தை பராமரிப்பதில் ஏற்பட்ட சிக்கல்களை கருத்திற் கொண்டு, 1974ஆம் ஆண்டு தேசிய அரச சபை சட்டத்தின் கீழ், 1975ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆரம்பிக்கப்பட்டது.
அதன்பின்னர் 1978ஆம் ஆண்டு உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் கரையோர பகுதிகளுக்கான குழாய் மூல குடிநீர் விநியோகம் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு இலங்கையின் நீர் விநியோகம் முன்னேற்றம் கண்ட நிலையில், 2007ஆம் ஆண்டு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு என்ற பெயரில் பிரத்தியேக அமைச்சொன்றும் நிறுவப்பட்டது.
இதன்படி, இலங்கையில் 9 இலட்சம் குழாய் மூலமான குடிநீர் விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றது.
இலங்கையில் தற்போது 46 வீதமானோருக்கு குழாய் மூல குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு குறிப்பிடுகின்றது.
இலங்கை முழுவதும் குழாய் மூல குடிநீர் வெகு விரைவில் வழங்கப்படும் என்ற நம்பிக்கை, இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற உலக நீர்த் தினத்தில் எம்மனங்களில் எழுகின்றமை, மகிழ்ச்சியளிக்கின்ற விடயமாகும்.