முல்லைத்தீவு வட்டுவாகல், நந்திக்கடல் உள்ளிட்ட 8,000 ஹெக்டேயருக்கும் மேற்பட்ட பிரதேசம் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்குரிய பகுதியாக அரச வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதிகளில் வாழ்வாதார கடற்றொழிலை நம்பியுள்ள சுமார் 5,000 மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டுவாகல், நந்திக்கடல் பகுதிகளை வன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஆளுகைக்குள் கொண்டு வரும் வர்த்தமானி அறிவித்தல் 2017 ஆம் ஆண்டு தை மாதம் 24 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இந்த வர்த்தமானி அறிவித்தல் இதுவரையும் மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அம்பலமாகியிருக்கின்றது என வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கூறினார்.
வட்டுவாகல், நந்திக்கடல் பகுதிகளில் இறால் தொழில் உட்பட சிறுகடல் தொழிலில் சுமார் 5 ஆயிரம் வரையான மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் பிரதான வாழ்வாதாரமாக இந்தப் பகுதிகளே உள்ளன. இந்தப் பகுதிகள் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் வந்தால் இங்கு எமது மீனவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால் 5000 குடும்பங்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் எனவும் ரவிகரன் சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே வட்டுவாகல் பகுதியில் கோதாபய கடற்படை முகாமுக்காக மக்களுடைய பெருமளவு காணிகள் பறிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது அந்த மக்களுடைய வாழ்வாதாரத்தையும் பறிப்பதற்கு பாரிய சதித் திட்டமாகவே இதனைக் கருத முடியும் எனவும் ரவிகரன் கூறினார்.
அரசின் இந்தச் சதித் திட்டத்தை முறியடிக்காவிட்டால் எமது மீனவர்கள் தொழிலின்றி வறுமையால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை எதிர்காலத்தில் நிச்சயமாக உருவாகும். இந்நிலையில் இந்த விடயத்தை 25 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டவுள்ளேன்.26 ஆம் திகதி வட மாகாண சபையிலும் இந்த விடயத்தைக் கொண்டுவந்து அரசின் இந்தச் சதியைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ரவிகரன் தெரிவித்தார்.