மனித உரிமை கெளன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்!

0
315

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கெளன்சிலில் இருந்து விலகி இருக்கும் அமெரிக்கா, அந்த அமைப்பை, “அரசியல் சார்புடைய சாக்கடைக்குழி” என்று சாடியுள்ளது.

அந்த அமைப்பு, “பாசாங்குத்தனம் மற்றும் தன்னாட்சி அமைப்பு” போன்று செயற்படுவதாகவும், “மனித உரிமைகள் தொடர்பில் கேலிக்கூத்து செய்கிறது” என்றும் ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவை தளமாகக் கொண்டு 2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஐ.நா மனித உரிமை கெளன்ஸிலில் மனித உரிமை விடயத்தில் மோசமான பதிவுகளை பெற்ற நாடுகளை உறுப்பினராக அனுமதிப்பது குறித்து விமர்சனங்கள் உள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அந்த கெளன்சிலில் இருந்து விலகும் அறிவிப்பை ஹாலே வெளியிட்டிருந்தார். மனித உரிமைகளை பாதுகாப்பதில் பலவீனமான ஒரு அமைப்பு என்று பொம்பியோ அந்த கெளன்சிலை குறிப்பிட்டார்.

இந்த அறிப்புக்கு பதில் அளித்து, ஐ.நா செயலாளர் நாயகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பொன்றில், கெளன்சிலில் அமெரிக்கா நீடிப்பதை அதிகம் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இந்த முடிவு அதிர்ச்சி தரும் செய்தியல்ல என்று குறிப்பிட்டிருக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயித் ராத் அல் ஹுஸைன், இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளார். இதனிடையே இஸ்ரேல் இந்த முடிவை வரவேற்றுள்ளது.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லையில் குடியேற்ற சிறுவர்களை அவர்களது பெற்றோர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையிலேயே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.

அமெரிக்காவின் இந்த கொள்கை “மனசாட்சிக்கு விரோதமானது” என்று ஹுஸைன் திங்களன்று குறிப்பிட்டிருந்தார்.

மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா ஆணையத்திற்கு பதிலாகவே 2006 இல் மனித உரிமை கெளன்சில் அமைப்பட்டது. எனினும் மோசமான மனித உரிமை பதிவுகளை கொண்ட நாடுகளுக்கு உறுப்புரிமை வழங்குவது குறித்து இந்த கெளன்சில் மீது விமர்சனம் உள்ளது.

பல்வேறு பிராந்தியங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் 47 உறுப்பு நாடுகள் மூன்று ஆண்டுகள் தவணைக்காலத்திற்கு கெளன்சிலில் அங்கத்துவம் பெறும்.

இந்த கெளன்சில் ஆண்டுக்கு மூன்று தடவைகள் கூடி ஐ.நா உறுப்பு நாடுகளின் மனித உரிமை பதிவுகள் குறித்து மீள் பரிசீலனை செய்யும். இதன்போது தமது நாடுகளின் மனித உரிமையை மேம்படுத்துவதற்கு வாய்ப்புகளை இந்த கெளன்சில் வழங்கும்.

சிரியா, வட கொரியா, பிரூண்டி, மியன்மார் மற்றும் தென் சூடான் உட்பட மனித உரிமையை மீறும் நாடுகளுக்கு இந்த கெளன்சில் சுதந்திர விசாரணையாளர்களை அனுப்புவதோடு விசாரணைகளுக்கு ஆணைக்குழுக்களையும் அமைக்கிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கெளன்சில் மீது கடந்த பல ஆண்டுகளாக விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையிலேயே அமெரிக்கா அதில் இருந்து விலகியுள்ளது.

2006 ஆம் ஆண்டு அது நிறுவப்படும்போதும் அதில் இணைவதற்கு அமெரிக்கா ஆரம்பத்தில் மறுத்தது. அது பழைய ஆணைக்குழு போல் இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி இருந்தது.

2009 ஆம் ஆண்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவின் காலத்திலேயே அமெரிக்கா இந்த கெளன்சிலில் இணைந்ததோடு 2012 இல் மீண்டும் உறுப்பினராக தெரிவானது.

எனினும் இந்த கெளன்சிலில் சீனா, ரஷ்யா, சவூதி அரேபியா, அல்ஜீரியா மற்றும் வியட்நாம் உறுப்பு நாடுகளாக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக மனித உரிமை குழுக்கள் குரல் எழுப்பி இருந்தன.

எனினும் இஸ்ரேல் விடயத்தில் மனித உரிமை கெளன்சிலுடன் அமெரிக்கா நீண்ட காலமாக முறுகல் போக்கையை கடைப்பிடித்து வந்தது. இவ்வாறு இஸ்ரேல் சார்பு நிலையை எடுக்கும் அமெரிக்கா மனித உரிமை கெளன்சில் பக்கச்சார்பாக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டி வந்தது.

கடந்த மாதம் இந்த கெளன்சிலில் கொண்டுவரப்பட்ட, காசாவில் பலஸ்தீனர் கொல்லப்படுவதற்கு இஸ்ரேல் அதிக பலப்பிரயோகத்தை மேற்கொள்வதாக குற்றம்சாட்டும் தீர்மானத்திற்கு அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா மாத்திரமே எதிராக வாக்களித்திருந்தன.

அரசியல் சர்ச்சைகளால் வெனிசுவேலாவில் பல ஆர்ப்பாட்டக்காரர்களும் கொல்லப்படும் நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதை ஏற்க முடியாது என்று அப்போது நிக்கி ஹாலே அந்த கெளன்சிலில் குறிப்பிட்டிருந்தார்.

ஐ.நா மனித உரிமை கெளன்சிலில் இஸ்ரேல் விடயம் நிரந்தரமாக எடுத்துக்கொள்ளப்படுவதோடு அது பலஸ்தீனர்களை நடத்தும் விதம் குறித்து தொடர்ச்சியாக ஆராயப்பட்டு வருகிறது. இவ்வாறான மீளாய்வு கூட்டம் ஒன்றை இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாமல் புறக்கணித்திருந்தது.

ஐ.நா மனித உரிமை கெளசில் குறித்து கடும் வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்திய ஹாலே, இந்த நடவடிக்கையானது அமெரிக்கா மனித உரிமை விடயத்தில் அதன் பொறுப்புக்களில் இருந்து விலகிக்கொள்வதாக இருக்காது என்று தெரிவித்தார்.

“ஐ.நா மனித உரிமை கெளன்சில் வட கொரியா, சிரியா, மியன்மார் மற்றும் தென் சூடான் போன்ற நாடுகளில் முக்கிய பங்காற்றி வருகிறது. ஆனால் டிரம்ப் இஸ்ரேலை பாதுகாப்பதில் மாத்திரமே கரிசணை காட்டுகிறார்” என்று மனித உரிமை கண்காணிப்புக் குழுவின் இயக்குனர் கேன் ரொத் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா சர்வதேச உடன்பாடுகளில் இருந்து விலகிக்கொள்ளும் மற்றொரு நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. இதற்கு முன் அந்த நாடு பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து விலகிக் கொண்டதோடு ஈரான் அணுசக்தி உடன்படிக்கையில் இருந்தும் வெளியேறியது.

இந்த கெளன்சிலில் இருந்து விலகும் முதல் நாடு அமெரிக்கா என்று ஐ.நா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here