வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களின் காணிகளை மீள வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வந்தாலும் இராணுவம் அதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் காரியங்கள் தொடர்கின்றன. பலாலி கிழக்கு, வசாவிளான் பகுதியில் விடுவிக்கப்பட்ட காணிகள் மக்கள் குடியிருப்புக்களற்ற கட்டாந்தரைகளாகும். மக்களுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் படையினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், புதிதாக கம்பிவேலி அடித்து அதனை தம்வசப்படுத்தியுள்ளனர்.
இதனால் மீளக்குடியேறச் சென்ற மக்கள் மிகுந்த கவலைக்கும், ஏமாற்றத்துக்கும் ஆளாகியுள்ளனர் எனப் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சி யின் தலைவருமான மாவை சேனாதிராஜா வீரகேசரி வாரவெளியீட்டுக்கு நேற்றுத் தெரிவித்தார்.
பலாலி கிழக்கு, வசாவிளான் பகுதியில் 1,024 ஏக்கர் காணியை அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் புதிய அரசு அறிவித்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தமது காணிகளைப் பார்வையிடச் சென்ற மக்கள் மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளானார்கள். இது தொடர்பில் மாவை சேனாதிராஜா எம்.பி. கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நாளை 23 ஆம் திகதி வளலாய் பகுதிக்கு விஜயம் செய்து மீள்குடியேற்றத்தை பார்வையிடவுள்ளனர். இது தொடர்பில் எமக்கும் அழைப்புக்கள் வந்துள்ளன. எவ்வாறெனினும், மீள்குடியேறச் சென்ற மக்களுக்கு மிகுந்த ஏமாற்றமே காத்திருந்ததாக மக்கள் கூறுகின்றார்கள்.
தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடமிருந்து படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தது. இதற்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் தங்கள் ஆணையை வழங்கியுள்ளனர். எனவே அரசாங்கம் அரசியல் தீர்மானம் ஒன்றை எடுத்து அதனை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் அஞ்சத் தேவையில்லை.
ஏலவே, இந்த விவகாரம் தொடர்பில் நாம் ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோருடன் பேச்சு நடத்தியுள்ளோம். அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஆனால் மக்கள் குடியிருப்பு பகுதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. படையினர் மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்கின்றனர். அத்துடன் எங்கும் முகாம்களை நிறுவியுள்ளனர்.
தமிழ்பேசும் மக்கள் மிகுந்த திடசங்கர்ப்பத்துடன் கடந்த ஆட்சியை மாற்றி புதிய அரசுக்கு வழிவிட்டார்கள். அதன்மூலமாவது தங்கள் நெருக்கடிகள் தீரும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாகும்.
எனவே, அவர்களின் எதிர்பார்ப்பு வீண்போகாத வகையில் மக்களின் காணிகளை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் படையினர், முகாம் அமைத்தும் விவசாயம் மேற்கொண்டும் வருவதுடன் விவசாய உற்பத்திகளை யாழ்ப்பாண சந்தையிலேயே விற்பனை செய்தும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றனர். இந்த நிலைமையை மாற்றியமைப்பது அரசின் கடமையாகும்.
மக்களின் ஆணையைப் பெற்ற அரசு 100 நாட்களுக்குள் அவர்களுக்குரிய சொந்த காணியை மீள ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தது. அதனை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் நாளை வருகைதர திட்டமிட்டிருக்கும் நிலையிலும் காணிகளை முழுமையாக ஒப்படைக்கும் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. இராணுவம் புதிதாக வேலியமைத்து மக்கள் தங்கள் குடியிருப்புக்களுக்கு செல்ல முடியாது தடுத்து வருகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் கொதிப்படைந்துள்ளனர். இது அனைவரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.
மேலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பிரதேசங்களிலும் சம்பூரிலும் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைக்க அரசாங்கம் அரசியல் ரீதியான தீர்மானமொன்றை முன்னெடுத்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சுவதாக அமையும் என்றார்.