சிறீலங்கா இராணுவம் திட்டமிட்டே ஐந்து மடங்கு சம்பளம் கொடுத்து எமது மக்களை விலைக்கு வாங்குகின்றதோ என்று எண்ணவேண்டியுள்ளது.
மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய நடுவண் அலுவலக கட்டடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்களின் தேவைகள் அனைத்தும் போராடிப் பெறவேண்டிய ஒரு கட்டாயத்திலேயே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய முறையான உரித்துக்களைக் கூட கையளிப்பதற்கு பின்நிற்கிறது அரசு. சாதாரண விடயங்களுக்குக் கூடப் போராடியே எமது உரிமைகளைப் பெறவேண்டிய நிலையில் நாம் இருந்து வருகின்றோம்.
அண்மையில் பத்திரிகையிலும் ஊடகங்களிலும் வெளிவந்த ஒரு செய்தியில் இராணுவத் தளபதி ஒருவரின் செயலை பாராட்டி மதிப்பளித்து அவருக்கு மலர் மாலைகள் அணிவித்து பல்லக்கில் ஏற்றிவந்து விடை கொடுத்து அனுப்பியதாக செய்திகள் வெளிவந்தன.
அவர்கள் அவ்வாறு நடந்துகொள்வதற்கு இயல்பாகவே அந்த அலுவலர் அவ்வாறான நல்ல குணநலன்களைக் கொண்டிருந்தாரா அல்லது அவ்வாறு இயங்குமாறு பணிக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய அவர்கள் செயற்பட்டார்களா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
ஆனால் அவரால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளுக்கு செலவிடப்பட்ட நிதிகள் எங்கிருந்து வந்தன என்பன பற்றி எதுவுமே கூறப்படவில்லை.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு எம்மால் 6 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டு வருகின்றது. ஊளுனுஇ30 ஆயிரம் ரூபாவுக்கு மேலாக வழங்கி வந்துள்ளது.
இந்த நிதி இதற்கென சிறீலங்கா இராணுவத்திற்கு ஒதுக்கி வைத்த பணமாக இருக்க முடியாது. இவ்வாறான செலவுகளில் வெளிப்படைத் தன்மை இல்லாததால் சிறீலங்கா இராணுவம் திட்டமிட்டே ஐந்து மடங்கு சம்பளம் கொடுத்து எமது மக்களை விலைக்கு வாங்குகின்றதோ என்று எண்ணவேண்டியுள்ளது.
அவர்களுக்கான மேலதிக பணம் எங்கிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை இராணுவம் விபரிக்க வேண்டும்.
இந்த நிதிகள் வடமாகாண சபைக்கு வழங்கப்பட்டிருப்பின் அல்லது வடமாகாண சபையின் ஒத்திசைவோடு கொழும்பு அரசால் மேற்கொள்ளப்பட்டிருப்பின் எம் மக்களை விலைக்கு வாங்கும் ஒரு கைங்கரியமாக அது அமைந்திருக்காது.
யுத்த காலப் பகுதியில் எமது உறவுகளை முதியவர் குழந்தைகள் பெண்கள் இளைஞர்-யுவதிகள் நோய்வாய்ப்பட்டவர்கள் என்ற எதுவித வேறுபாடுகளோ தயவு தாட்சண்யமோ இன்றி கொத்துக் கொத்தாக கொன்று குவித்த நிகழ்வுகளை நேரில் பார்த்த எவருக்கும் அவை மறந்து போய்விட ஞாயமில்லை.
அவ்வளவு உயிர்களையும் காவு கொள்வதற்கு தாம் சார்ந்த ஒரு அமைப்புக் காரணமாக இருந்ததே என்ற கவலை குறித்த சிறீலங்கா இராணுவ அலுவலருக்கு இருந்ததோ நான் அறியேன்.
இருந்திருந்தால் அந் நினைவு வாழ்நாள் முழுவதும் அவரை வாட்டி வதைக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதனடிப்படையில் தமது தவறுகளை சீர் செய்வதற்கும் அல்லது இறை மன்றாட்டம் மேற்கொள்வதற்குமாக இவ்வறான தார்மீக சிந்தனைகள் அந்த அலுவலரிடம் தோற்றம் பெற்றிருக்கக் கூடும் என்பதை நாம் உணர வேண்டும். என்றார்.
Home
ஈழச்செய்திகள் கொத்துக் கொத்தாக கொன்று குவித்த நிகழ்வுகளை நேரில் பார்த்த எவருக்கும் அவை மறந்து போய்விட ஞாயமில்லை!