யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் பூதவுடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பொலிஸ் பிரிவின் மல்லாகம் பகுதியில் நேற்று முன்தினம் (17) பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த 33 வயதான பா.சுதர்சனின் பூதவுடல் யாழ். போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் நேற்றிரவு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து, குளமங்கால் – மல்லாகம் பகுதியிலுள்ள வீட்டிற்கு இரவு 11.30அளவில் பூதவுடல் கொண்டு செல்லப்பட்டது.
நேற்று நள்ளிரவு முதல் இன்று பகல் 3 மணி வரை இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
துப்பாக்கிக் குண்டானது இடது முன்பக்கமாக சுவாசப் பையை துளைத்துச் சென்றுள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், சுவாசப்பை முற்றாக சேதமடைந்து அதனூடாக ஏற்பட்ட இரத்தப்பெருக்கே மரணத்திற்கு காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த நபரின் உடலில் மோதல் இடம்பெற்றமைக்கான சான்றுகள் உள்ளதாக பிரேதப்பரிசோதனை அறிக்கை குறிப்பிடுகின்றது.
குறிப்பாக நெற்றிப் பகுதியில் அடிக்காயம் காணப்படுவதுடன், கண்ணின் கீழ் பகுதியில் காயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனைத்தவிர, உடலின் தோள் மூட்டுப் பகுதியில் கண்டல் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், இடது பக்க கையில் துப்பாக்கிக் குண்டு உராய்ந்து சென்ற காயமும் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, குளமங்கால் சவேரியார் ஆலயத்தில் இன்று நடைபெற்ற இறுதிக்கிரியைகளில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டனர்.
குளமங்கால் கிறிஸ்தவ மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.