அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முன்னாள் பிரசார மேலாளர் பால் மனஃபோர்டின் ஜாமீனை திரும்பப் பெற்ற வாஷிங்க்டன் டி.சி நீதிமன்றம், அவரை விசாரணை முடியும் வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.
2016 அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை ராபர்ட் முல்லர் விசாரித்து வருகிறார். விசாரணையின் முன், பால் மனஃபோர்ட் முக்கிய சாட்சிகளை கலைக்க முயல்வதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிணை விதிமுறைகளை மீறி மறைகுறியாக்கப்பட்ட மொபைல் செயலிகளை பயன்படுத்தி பிற நபர்களை தொடர்பு கொண்டதாகவும் மனஃபோர்ட் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வரி மோசடி, பண மோசடி, சட்டவிரோதமாக அழுத்தங்கள் அளித்ததாகவும் அவர் மீது குற்றங்கள் பதியப்பட்டுள்ளன.
மனஃபோர்ட், “அவர் மேல் வைக்கப்பட்ட நம்பிக்கையை தவறாக பயன்படுத்தியதாகவும்”, நீதிமன்ற நடவடிக்கைகளை “ஏதோ சந்தைப்படுத்துதல் போல நினைத்துக் கொண்டிருப்பதாகவும்” அமெரிக்க மாவட்ட நீமிபதி ஏமி பெர்மன் கூறினார்.
“இது ஒன்றும் நடுநிலைப் பள்ளி அல்ல. அவரது மொபைலை நான் வாங்கி வைத்துக் கொள்ள முடியாது” என்று நீதிபதி கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மனஃபோர்ட் இன்னும் விசாரிக்கப்படாத நிலையில், இது ‘நியாயமற்றது’ என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.