வடக்கில் நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாட்டுக்கு எதிராக பெண்கள் உட்பட பல பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்திவருகின்ற நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் செய்தி சேகரித்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவருக்கு முல்லைத்தீவு நகரில் இயங்கும் நுண்கடன் வழங்கும் நிறுவன ஊழியரால் அச்சுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.
நேற்றையதினம் முல்லைத்தீவு நகரில் நுண் கடன் திட்டங்களுக்கு எதிராகவும் நுண் நிதி நிறுவனங்களுக்கு எதிராகவும் அதனால் பாதிக்கபட்ட பெண்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் குறித்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை முல்லைத்தீவு நகரில் இயங்கும் பிரபல நுண்நிதிநிறுவன ஊழியர்கள் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டதாக போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்கள் விசனம் வெளியிட்டிருந்தனர்.
இதனை பதிவு செய்து செய்தியாக வெளியிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளரான கணபதிப்பிள்ளை குமணன் என்பவருக்கு குறித்த புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நுண்நிதி நிறுவன ஊழியர் ஒருவரால் வீதியில் மறித்து அச்சுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த ஊடகவியாலரால் அச்சுறுத்தல் விடுத்த நுண் நிதி நிறுவன ஊழியருக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியபட்டுள்ளது.
வவுனியா மாவட்ட சிவில் சமூகம்
நுண்நிதி கடன் செயற்பாட்டினால் அசௌகரியங்களை எதிர்நோக்கும் சமூகங்களை பாதுகாப்பது தொடர்பாக அரசுக்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தத்தை கொடுக்கும் முகமாக வவுனியா மாவட்ட சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பெண்கள் சுய உதவி குழுக்களினால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கடை வழியினூடாக வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றடைந்தனர்.
பின்னர் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் மாவட்ட செயலகத்திற்கு சென்று மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் ஆளுநருக்கும், அரசாங்க அதிபருக்குமான மகஜரொன்றினையும் கையளித்தனர்.
இதன்போது வட்டிக்கு வட்டி, இரத்து செய்து வாழவிடுங்கள் ஏழைகளின் உணர்வை புரிந்து கொள்; பெண்களுக்கு கடன் திட்டமா தற்கொலைக்கு திட்டமா நாங்களும் மனிதர்களே; மரியாதையுடன் அணுகுங்கள் நுண் நிதி கடன் சுமை குடும்பங்கள் சீரழிவு போன்ற பதாதைகளையும் கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணி
கிளிநொச்சியில் நுண் நிதி கடன் செயற்பாட்டினால் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் சமூகத்தையும் பெண்களையும் பாதுகாக்கும் வகையிலும் நுண்கடன் செயற்பாட்டின் பொறிக்குள் சிக்கியிருக்கும் மக்களை விடுவிக்கும் வகையிலும் அரசாங்கத்திற்கும் மத்திய வங்கிக்கும் அழுத்தங்களை கொடுக்கும் வகையிலும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று நேற்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட சிவில் சமுக அமைப்புகள் கிளிநொச்சி அரச மற்றும் சிவில் சமுக அமைப்புகளின் சம்மேளனம் ஆகியன ஏற்பாடு செய்த இப் பேரணி காலை 10மணிக்கு கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் இருந்து ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது.
கடந்த ஆண்டுகளில் நுண் நிதி செயற்பாடுகள் மூலம் நன்மைகள் ஏற்பட்டிருந்தாலும் தற்போது இது ஒரு பாரிய சவாலாக மாறியுள்ளது., தற்கொலைகளும் அதிகரித்து காணப்படுகின்றன.
முல்லைத்தீவில் கிளர்ந்தெழுந்த மக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்கு பின்னர் குறிப்பாக பெண்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினையான நுண்நிதி கடன் திட்டங்களுக்கு எதிராகவும் நுண் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராகவும் அமைதியான முறையில் மக்கள் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை நேற்று காலை முன்னெடுத்திருந்தனர்.
நுண்நிதி கடன் செயற்பாட்டினால் அசௌகரியங்களை எதிர்நோக்கும் சமூகங்களை பாதுகாக்கும் நோக்கில் குறிப்பாக பெண்களை பாதுகாக்கவும், இந்நுண்நிதி கடன் செயற்பாட்டில் பொறிக்குள் சிக்கி இருக்கும் மக்களை விடுவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அரசாங்கத்திற்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தம் கொடுக்கும் வகையில் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக வலையமைப்பின் ஏற்பாட்டில் நேற்று காலை முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் இருந்து கவனயீர்ப்பு பேரணி முல்லைத்தீவு நகர் பகுதி ஊடாக மாவட்ட செயலகத்தினை சென்றடைந்தது.
இவ்வாறு பேரணியில் சென்ற மக்களை முல்லைத்தீவு நகரில் இயங்கி வரும் பிரபலமான ஒரு நுண்கடன் வழங்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒளிப்படம் எடுத்து பெண்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது. இதனை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அவதானித்து தாம் குறித்த நிறுவனத்தில் கடன்களை பெற்றுள்ளதாகவும் இவ்வாறு நுண்கடன் திட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும் போது குறித்த நிறுவனத்தினர் தம்மை அச்சுறுத்தும் விதமாக புகைப்படம் எடுத்து நடந்து கொண்டதாக கவலை தெரிவித்தனர்.
இனிவரும் நாட்களில் இந்த புகைப்படங்களை வைத்து குறித்த நிறுவனத்தில் தாம் பெற்ற கடன்களை திரும்ப செலுத்தும் போது அந்த நிறுவன ஊழியர்களால் அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் சிலர் தெரிவித்தனர்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர் பகுதியில் 8க்கு மேற்பட்ட நுண் நிதி கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன. இதனால் நாள்தோறும் பல பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றார்கள்.
குறிப்பாக இவ்வாறு கடன் வழங்கும் நிறுவனங்கள் பெண்களிடம் சென்று குழுக்களாக சேர்த்து ஆசை வார்த்தை காட்டி கடன்களை வழங்கி வருவதாக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். இந்த நிறுவனங்களின் முகவர்களாக செயற்படும் கடன் அறவிடும் ஊழியர்கள் பலர் பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதையும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மன்னாரில் ஆர்ப்பாட்டத்திலீடுபட்ட மக்கள்
நுண் நிதிக்கடன் செயற்பாட்டினால் பாதிக்கப்படும் மக்களையும் குறிப்பாக பெண்களை பாதுகாக்கவும், நுண் நிதிக் கடன் செயற்பாட்டின் பொறிக்குள் சிக்கியிருக்கும் மக்களை உடனடியாக விடுவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அரசாங்கத்திற்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தம் கொடுக்கும் முகமாக மன்னாரில் நேற்று வியாழக்கிழமை காலை கவனயீர்ப்புப் பேரணி இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் நல்லாட்சிக்கான பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டிலும்,மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஒருங்கிணைப்பில் நேற்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்திற்கு முன் பேரணி ஆரம்பமாகி மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் நிறைவடைந்தது.
குறித்த பேரணியில் பெண்கள் அமைப்புக்கள்,பொது அமைப்புக்கள்,பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் நுண் நிதிக்கடன் தொடர்பில் பல்வேறு வசனங்கள் எழுப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டனர்.
கவனயீர்ப்பு பேரணியின் முடிவில் அரசாங்கத்திற்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தம் கொடுக்கும் வகையில் கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(நன்றி:வீரகேசரி)