தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பில்லை என சுவிற்சர்லாந்து நடுவண் அரசின் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் பெலின்சோனாவில் அமைந்துள்ள சுவிற்சர்லாந்து நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றமே தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை எனத் தீர்பளித்தது.
குற்றம் சுமத்தப்பட்டோர்கள் அனைவரும் குற்றவியல் அமைப்பு கட்டாய நிதி சேகரிப்பு மிரட்டிப் பணம் பறிப்பு எனும் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
சுவிஸ் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த திரு.யோகேஸ், திரு.கவிதாஸ், திரு.சிவலோகநாதன், திரு.குமார் ஆகிய மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களும் தள்ளுபடி செய்யப்பட்டு வழக்கலிருந்து விடுவிக்கபட்டதுடன் அர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன் சுவிஸ் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய பொறுப்புகளில் இருந்த மூவரான திரு.குலம், திரு.அப்துல்லா, திரு.மாம்பழம், ஆகியோர் மீது வங்கி மோசடி தொடர்பில் அறிந்திருந்து உதவியதற்காகத் தண்டனைப் பணம் செலுத்தவும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்படும் தடுப்பும் வழங்கப்பட்டது.
அரச தரப்பு வழக்கறிஞர் திருமதி நோத்தோ இலங்கையிலும், சுவிசிலும் விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு என்பதற்கு தேடி அளித்த சான்றுகள் அனைத்தையும் சுவிற்சர்லாந்து நடுவண் அரசின் குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்தது.
சுவிஸ் நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றம் இலங்கையிலும் அதற்கு அப்பால் எந்த நாட்டிலும் விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்வேளையிலும் குற்றவியல் அமைப்பாக செயற்பட்டதற்கோ அல்லது குற்றவியல் செயலை ஊக்குவித்தற்கோ எவ்வித சான்றுகளும் இல்லை எனத் தெளிவாக விளக்கத்தையும் அளித்துள்ளது.!