பொன்னாலையில் இருந்து கடற்படையினர் நன்னீர் எடுத்துச் செல்வதை உடனடியாகக் கட்டுப்படுத்தவேண்டும் என வலி.மேற்கு பிரதேச சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலி.மேற்கு பிரதேச சபையின் நான்காவது கூட்டம் இன்று (13) தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினர் ந.பொன்ராசா, பொன்னாலையில் கடற்படை தண்ணீர் எடுத்துச் செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டும் என பிரேரணை கொண்டுவந்தார். இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இப்பிரேரணையைச் சபையில் முன்வைத்து உரையாற்றிய பொன்ராசா, கடற்படை தினமும் 50 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 65 ஆயிரம் லீற்றர் வரையான நன்னீரை எடுத்துச் செல்கின்றனர் எனவும் இந்நிலை தொடர்ந்தால் பொன்னாலை மக்கள் குடிதண்ணீருக்காக அலையவேண்டிய நிலை ஏற்படும் எனச் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
பொன்னாலை நன்னீர் வளம் குறைந்த பிரதேசமாகும். கடலுக்கு மிகச் சமீபத்தில் இக்கிராமம் அமைந்துள்ளதால் கடல்நீர் மிக இலகுவாக நிலத்தடி நீரை மாற்றக்கூடிய அபாயம் உள்ளது.
இங்கு முன்னோர்கள் தமது ஆன்மீக, விஞ்ஞர்ன ஆய்வுகள் மூலம் கண்டறிந்த இடங்களில் அமைத்த ஒருசில கிணறுகளே இன்றும் நன்னீர் வளம் மிக்க கிணறுகளாக உள்ளன.
பொன்னாலை குடிநீர் விநியோகத் திட்டத்தில் உள்ள இரு கிணறுகளில் இருந்து கடற்படையினர் எடுத்துச் செல்லும் நன்னீரை சுழிபுரம் சம்பில்துறையில் முகாமிட்டுள்ள கடற்படையினர் குளிப்பதற்கும் அந்த கடற்படை முகாமிலும் அங்குள்ள பௌத்த விகாரையிலும் உள்ள மரக்கன்றுகளுக்கு ஊற்றுவதற்கும் பயன்படுத்துகின்றனர்.
தினமும் இவ்வாறு அதிகளவான நன்னீர் எடுத்துச் செல்லப்படுவதால் பொன்னாலையில் நன்னீர் வளம் அற்றுப்போகும் சூழல் உருவாகியுள்ளது.
பொன்னாலை குடிதண்ணீர் விநியோகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தினமும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நீர் விநியோகிக்கப்படுகின்றது. ஆனால், கடற்படையினர் இரவு பகலாக நன்னீரைச் சுரண்டிச் செல்கின்றனர்.
இச்செயற்பாட்டால் பொன்னாலையில் உள்ள நன்னீர்க் கிணறுகள் உவர் நீராக மாற்றமடைந்து வருகின்றன. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் மக்கள் நன்னீர் எடுத்துப் பருகிய சில கிணறுகள் இப்போது உவர் நீராக மாற்றமடைந்துள்ளன. இங்கு விவசாயச் செய்கை மற்றும் மரக்கறிப் பயிற்செய்கை என்பனவும் பாதிப்படைந்துள்ளன.
இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் சில வருடங்களில் பொன்னாலையில் அறவே குடிதண்ணீர் இல்லாத நிலை ஏற்படும். பொன்னாலை குடிதண்ணீர் விநியோகத் திட்டத்தையும் பிரதேச சபை கைவிடவேண்டிய நிலை வரும். மக்கள் தண்ணீருக்கு அலையவேண்டி ஏற்படும்.
கடற்படையின் இந்தச் செயற்பாட்டை தடுத்து நிறுத்துவதற்காக கடந்த சில வருடங்களாக தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், குறித்த கிணறுகள் அமைந்துள்ள காணியைக் கடற்படையினர் கொள்வனவு செய்துள்ளனர் எனக் காரணம் காட்டி அதிகாரிகள் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.
ஒரு காணியைக் கொள்வனவு செய்து வீடு கட்டினால் அங்கு நாம் வசிக்க முடியுமே தவிர விபச்சாரம் செய்ய முடியாது. அதுபோல், கடற்படையினர் அந்தக் காணியை வாங்கிவிட்டார்கள் என்பதற்காக எமது இயற்கை வளத்தைச் சுரண்டிச் செல்வதை அனுமதிக்க முடியாது.
இதேவேளை, கடற்படையினரின் நீர்ச்சுரண்டலுக்கான மின்சாரக் கட்டணத்தை எமது வலி.மேற்கு பிரதேச சபையே இதுவரை செலுத்திக்கொண்டிருக்கின்றது. அத்துடன், அங்கு படையினர் அமைத்துள்ள மினி முகாமுக்கும் 24 மணிநேர மின் விநியோகத்திற்கான கட்டணத்தையும் பிரதேச சபையே செலுத்துகின்றது.
பிரதேச சபை அதிகாரிகள் இதுவரை இச்செயற்பாட்டைத் தொடர்ந்தமை விசனத்திற்குரியது. பொன்னாலையில் வீதிகளுக்கு மின்விளக்குகளைப் பொருத்துவதற்கு நிதி இல்லை எனக் கூறுகின்ற எமது இந்தச் சபை, கடற்படைக்கு எவ்வாறு மின்கட்டணத்தைச் செலுத்த முடியும்?
எனவே, இது மக்களின் அடிப்படைத் தேவை என்ற ரீதியில், இதைத் தடுத்து நிறுத்தவேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் வலி.மேற்கு பிரதேச சபைக்கு உண்டு. பிரதேச சபை உடனடியாக நீர்வளச் சபையைத் தொடர்புகொண்டு உரிய ஆய்வை மேற்கொள்ளவேண்டும். கடற்படை தினமும் 10 ஆயிரம் லீற்றருக்கு மேற்பட்ட நீரை எடுத்துச் செல்வதை அனுமதிக்கக்கூடாது.
கடற்படையினர் நீரைப் பெறுவதற்கான மின்சாரக் கொடுப்பனவு மற்றும் கடற்படை மினி முகாமுக்கான மின் விநியோகக் கொடுப்பனவு என்பவற்றை வலி.மேற்கு பிரதேச சபை இனிச் செலுத்தக்கூடாது.
இதுவரை பிரதேச சபையால் செலுத்தப்பட்ட மின் கட்டணத்தைக் கடற்படையினரிடம் இருந்து மீள அறவிட்டு பொன்னாலையில் மின் விளக்குகளைப் பொருத்த அந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும். – என்றார்.