சிறீலங்கா அரசு இந்து மத விவகார பிரதி அமைச்சராக இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக தற்போது ஆர்ப்பாட்டம் இடம் பெற்றுள்ளது .
இந்து விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நேற்று சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபாலவால் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்துக்கு எதிராகவே ஆர்ப்பாட்டம் இடம் பெற்றுள்ளது..
அகில இலங்கை சைவ மகா சபை ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. அதில் இந்து சமயப் பிரதிநிதிகள், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதே வேளை இந்து விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து மக்களின் ஒற்றுமை அமைப்பினர் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரம் காந்திப் பூங்கா முன்னால் இன்று மாலை 5.45 மணியளவில் மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்து விவகாரங்களுக்கு முஸ்லிம் ஒருவரை பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டது இந்து மக்களை அவமானப்படுத்தும் செயலாகும், இதனால் இந்து முஸ்லிம் மதங்களுக்கிடையே முரன்பாடுகளை தோற்றுவிக்க வழிவகுக்கும் எனவே இப் பிரதியமைச்சர் நியமனத்தை உடனடியாக இரத்துச் செய்து பொருத்தமான ஒருவருக்கு வழங்கவும் என இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கருத்துத் தெரிவித்தனர்.