வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பின்வரும் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
´´கிம் உடனான எனது சந்திப்பு நேர்மையான, நேரடியாக மற்றும் ஆக்கப்பூர்வமாக இருந்தது. கடுமையான செயலின் தொடக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. நாம், போரின் பயங்கரத்தை மாற்றி அமைதியை ஏற்படுத்தலாம். வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிட்டால், அதனால் அந்நாடு எதையெல்லாம் பெறலாம் என்பதற்கு எல்லையே இல்லை. உலக நாடுகள் உண்மையில் வட கொரியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகின்றன´´ என டிரம்ப் கூறினார்.
மேலும், “கிம் புத்திசாலித்தனம் மிக்கவர். இளம் வயதிலேயே ஆட்சியில் அமர்ந்து, நாட்டை ஆள்கிறார்”, “தனது மக்களுக்குச் செழிப்பை ஏற்படுத்த, புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்தவர்,” என கிம் நினைவு கூரப்படுவார் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.
´´வட கொரியாவிற்கு கொடுக்கப்படும் உத்தரவாதங்களின் ஒரு பகுதியாக தங்களின் இராணுவ திறன்களை குறைக்கப் போவதில்லை. ஆனால், தென் கொரியாவுடனான கூட்டு இராணுவ பயிற்சிகளை அமெரிக்கா நிறுத்திக்கொள்ளும்´´ என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டு இராணுவப் பயிற்சியினால் அதிகளவில் பணம் செலவாகிறது எனவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “நிச்சயமாகக் கண்காணிக்கப்படும்,” என்றும் “அந்தக் கண்காணிப்புக் குழுவில் அமெரிக்கர்களும் சர்வதேச பார்வையாளர்களும் இடம்பெறுவார்கள்,” என்றும் தெரிவித்தார்.
´´அணு ஆயுத பயன்பாடு முடியும் போது தான் வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்படும். நான் தடைகளை நீக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன். அணு ஆயுத நீக்கம் குறித்து வட கொரியா உத்தரவாதம் அளிக்கும்போது தடை நீக்கம் பற்றி முடிவு செய்யப்படும். தற்போதைக்கு இந்தத் தடைகள் தொடரும்´´ என்று குறிப்பிட்டார்.
´´அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட முக்கிய தளங்களை ஏற்கனவே அழித்துவிட்டதாக கிம் என்னிடம் கூறினார்´´ எனவும் டிரம்ப் தெரிவித்தார்.
´´வட கொரியாவுக்கு தான் அச்சுறுத்தலாக இருக்க விரும்பவில்லை. வட கொரியா உடன் ஏதேனும் மோதல் ஏற்பட்டால், அதனால் மில்லியன் கணக்கான தென் கொரிய மக்கள் பாதிக்கப்படுவார்கள், நேற்றைய மோதல், நாளைய போராக மாற வேண்டியதில்லை,´´ எனவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் வடகொரியாவை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக மாற்ற வடகொரிய தலைவர் ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.