யாழ். சங்குவேலியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த குழந்தையின் உடலம் நல்லடக்கம்!

0
671

உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட யாழ். சங்குவேலியைச் சேர்ந்த இரண்டரை வயதுப் பெண் குழந்தை உயிருடனிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை நீங்கள் அனைவரும் அறிந்ததே.

இந்தநிலையில் நேற்று (10) காலை முதல் யாழ். சங்குவேலி கட்டுக்குளப் பிள்ளையார் கோயிலடியில் உயிரிழந்த குழந்தையின் இல்லத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட யாழ். சங்குவேலியைச் சேர்ந்த இரண்டரை வயதுப் பெண் குழந்தை உயிருடனிருப்பதாக உறவினர்கள் கூறினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் நான்கு நாட்களின் பின் நேற்றுமுன்தினம் (09) குழந்தை உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

குறித்த குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கடந்த மாதம்15 ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களாக அங்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. பின்னர் காய்ச்சல் குறையாத காரணத்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை வழங்கப்பட்டது. 

குறித்த குழந்தை மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்து விட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுக் கடந்த புதன்கிழமை(06) இரவு பெற்றோர்களிடம் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மறுநாள் வியாழக்கிழமை சங்குவேலியிலுள்ள குழந்தையின் வீட்டில் குழந்தைக்கு இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

நண்பகல் -12 மணியளவில் உயிரிழந்த குழந்தையின் சடலத்திலிருந்து திடீரென மலம், சிறுநீர் என்பன வெளியேறியுள்ளன. அத்துடன் குறித்த குழந்தையின் உடலில் இறந்த பின்னர் ஏற்படுவது போன்று எவ்வித மாற்றமுமின்றிக் காணப்பட்டமை அங்கு நின்ற பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அப்பகுதியில் ஒருவித பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்துக் குழந்தை உயிருடனிருப்பதாகக் கருதப்பட்டு உரும்பிராயிலுள்ள விநாயகர் ஆலயமொன்றிற்கும், உடுவில் பகுதியிலுள்ள தேவாலயமொன்றுக்கும் உறவினர்களால் கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் குறித்த குழந்தை இறக்கவில்லை எனப் பூசகரொருவரால் தெரிவிக்கப்பட்டமையால் குழந்தையின் இறுதிக்கிரியை ஏற்பாடுகள் யாவும் நிறுத்தப்பட்டன.

கடந்த வெள்ளிக்கிழமை இக் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்து மீண்டும் இறுதி அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்தன.

குழந்தையின் வலது கையில் சூடு காணப்படுவதாக அவரது உறவினரான இளம் பெண்ணொருவர் குழந்தையின் கையைத் தொட்டுப் பார்த்து விட்டுத் தெரிவித்தமையால் மரணச் சடங்கிற்கு வந்தவர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் இவ்வாறு கூறிய சில நிமிடங்களில் குழந்தையின் கையில் நாடித் துடிப்புக் காணப்படுவதாகக் குழந்தையின் தந்தையார் கூறியமையால் பரபரப்பு மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் இறுதிக்கிரியை ஏற்பாடுகள் யாவும் நிறுத்தப்பட்டு மரணச் சடங்கிற்கு வந்தவர்கள் மத்தியிலிருந்து குழந்தை தனியாகத் தூக்கிச் செல்லப்பட்டு அருகிலிருந்த வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று (10) காலை முதல் யாழ். சங்குவேலி கட்டுக்குளப் பிள்ளையார் கோயிலடியில் உயிரிழந்த குழந்தையின் இல்லத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து காலை-09.30 மணியளவில் பெற்றோர்,உறவினர்கள் மற்றும் ஊரவர்கள் கதறி அழ உயிரிழந்த குழந்தையின் சடலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.சுமார் இரண்டு கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள மானிப்பாய் கட்டுடை பிப்பிலி மயானத்தை முற்பகல்-10.30 மணியளவில் ஊர்வலம் சென்றடைந்ததைத் தொடர்ந்து உயிரிழந்த குழந்தையின் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உயிரிழந்த குழந்தையின் இறுதி ஊர்வல நிகழ்வுகளில் குழந்தையின் தாய், தந்தை உட்படப் பெருமளவான ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்தவர்களின் இறுதி ஊர்வல நிகழ்வுகளில் பெண்கள் கலந்து கொள்வது நடைமுறையிலுள்ள நிலையில் குழந்தையின் உறவினர்கள் மற்றும் அயலவர்களான பெண்கள் சிலரும் குழந்தையின் இறுதி ஊர்வல நிகழ்வுகளில் கலந்து கொண்டமை முக்கிய அம்சமாக நோக்கப்படுகின்றது.

உயிரிழந்த குழந்தையின் உடலம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட வேளையில் அங்கு கூடியிருந்த பெற்றோர்கள், உறவினர்கள் மாத்திரமன்றி ஊர் இளைஞர்கள் பலரும் கண்ணீர் விட்டு அழுதமை பலரதும் மனதை உருக்குவதாக அமைந்திருந்தது.

கடந்த நான்கு நாட்களாக குறித்த குழந்தை உயிருடன் இருக்கிறது என உறவினர்கள், ஊரவர்கள் பலரும் நம்பியிருந்த நிலையில் குழந்தை மரணமடைந்து விட்டதைப் பலராலும் ஜீரணிக்க முடியவில்லை.

குழந்தை உயிரிழந்தாலும் குறித்த குழந்தையைப் பலரும் அதிசயக் குழந்தையாகவே நோக்குகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here