வெள்ளம் ஏற்பட பிரதான காரணம் பிளாஸ்டிக் கழிவுகள்!

0
834

புதிய விஞ்ஞான ஆய்வுகள் மூலம் பிளாஸ்ரிக் எமது நாட்டில் சூழல் பாதிப்பை அதிகமாக ஏற்படுத்துகின்றது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது., புதிய சுற்றாடல் அதிகாரசபையும் களனிப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சிலரும் நடத்திய ஆய்வுகளின்படி ஒரு நாளைக்கு 50 இலட்சம் பிளாஸ்ரிக் போத்தல்கள் சூழலில் போடப்படுகின்றன. அதே போல் நாளொன்றுக்கு 200 இலட்சம் ஷொப்பிங் பைகள், 150 இலட்சம் லஞ்ச் சீற்றுகள் எமது சூழலுக்கு விடுவிக்கப்படுகின்றது என விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.

கடந்த நாட்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்கள் தொடர்பாக சூழலியலாளர்கள் நடத்திய ஆய்வில் கம்பஹா, புத்தளம், குருநாகல் போன்ற பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட பிரதான காரணம் பிளாஸ்ரிக் கழிவுகள் வடிகான்களின் நீர் பாதையை அடைந்திருந்தமை ஆகும்.

குறிப்பாக பிரதான நகரங்களில் அதிகளவான மழை பெய்தவுடன் வடிகான்களில் சென்று பிளாஸ்ரிக் அடைத்துக் கொண்டவுடன் நீர் வடிந்தோடுவது தடைப்பட்டு வெள்ளம் ஏற்படுகின்றது.

சர்வதேச பிரபல்யம் வாய்ந்த ‘சயன்ஸ்’ சஞ்சிகையில் 2015ம் ஆண்டு சஞ்சிகையொன்றில் அமெரிக்காவின் ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தின் ஜெனா ஜெம்பொக் எனும் சூழலியல் விஞ்ஞானி எழுதிய கட்டுரையில், இலங்கை கடற்பிரதேசமும் கடற்கரையும் பிளாஸ்ரிக் கழிவுகளால் மாசடைதலின் ஐந்தாம் இடத்தைப் பெறுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அக்கட்டுரையின்படி, எமது நாட்டைச் சூழவுள்ள கடற்கரைகளின் மூலம் 10 இலட்சம் இறாத்தல் பிளாஸ்ரிக் கழிவுகள் கடலை அடைகின்றன. எவ்வாறாயினும் சமுத்திரச் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளர் ருகுணு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் டர்னி பிரதீப் குமார இந்நாட்டின் பிரதான நதிகள் மற்றும் உல்லாசப் பிரயாண வலயங்களின் பிளாஸ்ரிக்குகள் மூலமாகவே கடலானது அதிகளவு மாசடைகின்றது எனக் குறிப்பிடுகின்றார். அதனைத் தடுக்க தற்போது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் டர்னி கூறினார்.

எமது நாட்டில் சிவனொளிபாதமலை யாத்திரையின் போது, பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் ஐந்து மெற்ரிக் தொன் கழிவாக அகற்றப்படும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக உயர் நீர்வளங்களின் பாதுகாப்புத் திட்டத்தின் முன்னாள் பணிப்பாளர் டி. பீ. முனவீர கூறியுள்ளார்.

உலகில் பல நாடுகள் பொலித்தீனை தடை செய்துள்ளன. அவர்கள் கடதாசி மற்றும் காட்போட் பைகளை பாவிக்கின்றார்கள். எம்மாலும் பொலித்தீனை தடை செய்ய முடியும். எமக்கு இயற்கையே மாற்றுவழிகளை தந்துள்ளது. துணிப்பைகள், கண்ணாடிப் போத்தல்கள், வாழை இலை என்பவற்றை நாம் பாவிக்கலாம். பிளாஸ்ரிக் பாத்திரங்களுக்குப் பதிலாக மண் பாத்திரங்களை பாவிக்கலாம். உக்கக் கூடிய பிளாஸ்ரிக் என்று எதுவும் இல்லை. உக்குவது என்றால் நீரை உறிஞ்ச வேண்டும்.

பிளாஸ்ரிக் பாத்திரங்களில், பொலித்தீனில் எதையேனும் இட்டால் நிறிது நேரத்தில் அதனுள்ளே காமா கதிர்கள் உருவாகும். அதன் காரணமாக பிளாஸ்ரிக் வெப்படைந்து பொருட்கள் புற்றுநோய் காரணிகளாக மாறிவிடுகின்றன. காமா கதிர்கள் மூலம் சயனைட் நஞ்சும் வேறு நஞ்சு வகைகளும் உருவாகின்றன. பிளாஸ்ரிக் போத்தல்களில் சுடுநீர், பெற்றோல், ஊறுகாய், தேநீர், புளிப்புச் சுவையுள்ள பானங்கள், தேங்காயெண்ணெய் என்பவற்றை இட்டு உணவாகப் பாவிப்பதனால் புற்றுநோய் காரணிகள் உள்ளிட்ட நச்சுக்கள் உலுவாகி உடம்பில் சேருமென டீ. பீ. முனவீர கூறுகின்றார்.

புதிய கண்டுபிடிப்புகளின்படி பொலித்தீன், பிளாஸ்ரிக், உற்பத்தி செய்யும் போதே சூழல் மாசடைகின்றது. 50000 பொலித்தீன் பைகளை உருவாக்கும் போது 17 கிலோ கிராம் சல்பர்டை ஒக்சைட் வளிமண்டலத்துக்கு வெளியிடப்படுகின்றது என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here