யாழ். வடமராட்சி கிழக்கு பகுதி மீனவர்கள் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தை இன்று முற்பகல் முற்றுகையிட்டனர்.
தாழையடி மீனவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
யாழ். பண்ணை பகுதியில் அமைந்துள்ள கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட தலைமை அலுவலகம் இன்று காலை 7.30 முதல் முற்றுகையிடப்பட்டதன் காரணமாக கடற்றொழில் திணைக்களத்தின் நிர்வாக செயற்பாடுகள் இன்று காலை முடக்கப்பட்டது.
வௌிமாவட்ட மீனவர்கள் அட்டைத் தொழிலில் ஈடுபடுவதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாக இன்று இந்த முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக மீனவர்கள் குறிப்பிட்டனர்.
மீனவர்களின் முற்றுகைப் போராட்டம் தொடர்பில் டம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.
வடமராட்சி கிழக்கு மீனவர்களின் கோரிக்கை தொடர்பில் கடற்றொழில் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் கூறினார்.