எதிர்காலத்தில் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரத்திலிருந்து 25 மணி நேரமாக மாற வாய்ப்புள்ளதாக புவியியல் ஆய்வாளர் ஸ்டீபன் மேயர்ஸ் தெரிவித்துள்ளார்.
140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அருகில் நிலவு இருந்தது. தற்போது அது 44,000 கிலோமீட்டர் தூரம் விலகிச் சென்றுள்ளது. 140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஒரு நாள் என்பது வெறும் 18 மணி நேரம் 41 நிமிடமாக இருந்தது. தற்போது 24 மணி நேரமாகவுள்ளது. நிலவு வருடத்திற்கு 3.82 சென்டிமீட்டர் விலகிச்செல்கிறது. இதனால் சில மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர், நிலவு அதிக தூரம் சென்றுவிடும். எனவே பூமியின் சுற்றும் வேகத்தில் மாறுபாடு ஏற்பட்டு பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என அமெரிக்காவின் விஸ்கான்சின் – மேடிசன் பல்கலைக்கழக ஆய்வாளராகவுள்ள ஸ்டீபன் மேயர்ஸ் கூறியுள்ளார்.
கடந்த சில நூற்றாண்டுகளாகவே பூமி சுற்றும் வேகம் 2 மில்லி நொடிகள் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரத்தை எடுத்துக்கொள்கிறது. இந்நிலையில், இந்த 2 மில்லி நொடிகள், இன்னும் 6.7 மில்லியன் ஆண்டுகளில் ஒரு நிமிடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கணக்கின் அடிப்படையில், இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் இது ஒரு மணி நேரமாக மாறும் என கூறப்படுகிறது.
எனவே, அப்போது ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது மாறி 25 மணி நேரமாகிவிடும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.