கொக்குவில் இந்து ஆசிரியர் மீது தாக்குதல்;பணிப்புறக்கணிப்பில் பாடசாலை ஆசிரியர்கள்!

0
261

கொக்குவில் இந்துக்கல்லூரியின் ஆசிரியர் தாக்கப்பட்டதை கண்டித்து, இன்று பாடசாலை ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கொக்குவில் இந்துக்கல்லூரியின் ஒழுக்கப் பிரிவிற்குப் பொறுப்பான ஆசிரியர் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதற்கு கண்டனம் வெளியிட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் அண்மைக்காலமாக வடமாகாணத்தில் ஆசிரியர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளமை கவலையளிப்பதாகவும் இலங்கையின் சட்டத்தின் ஆட்சி குறித்த சந்தேகமும் ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஆடியபாதம் வீதியில் உள்ள அவரது வீட்டுக்குள் நுழைந்த இனம்தெரியாத நபர்கள் சிலர் ஆசிரியரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளில் இந்த ஆசிரியர் தொடர்பான அவதூறாக பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன. இரண்டு சம்பவங்களும் ஒரே நபர்களாலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கலாமென காவல்துறையினர் விசாரணைகளை  நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையிலேயே இன்று பாடசாலை ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்க உபதலைவர் ஆ.தீபன் திலீசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு,

ஊடக அறிக்கை ,
இலங்கை ஆசிரியர் சங்கம்,
07.06.2018

ஆசிரியர் தாக்கப்பட்டமைக்கு கண்டணம்
————————————————

அண்மைக்காலமாக வடமாகாணத்தில் ஆசிரியர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளமை கவலையளிக்கின்றது. இங்கு சட்டத்தின் ஆட்சி குறித்த சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினமும் (06.06.2018) மாலை – யாழ்.கொக்குவில் இந்து கல்லூரியின் ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். யாழ்.குடாநாட்டில் தலைதூக்கியிருக்கும் சமூகவிரோத செயற்பாடுகளை பொலிஸாரால் தற்போதுவரை கட்டுப்படுத்த முடியவில்லையெனும்போது – இதன் பின்னணி குறித்த பாரிய சந்தேகம் மக்கள் மத்தியில் இருப்பது தவிர்க்கமுடியாததாகும். சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

யாழ்.குடாநாட்டை திட்டமிட்டு சீர்குலைக்கும் செயற்பாட்டில் பல சக்திகள் திரைமறைவாக முனைப்பு காட்டிவரும் நிலையில் – பாதுகாக்கும் தரப்புக்களும் உடந்தையென மக்கள் சந்தேகிக்கும் அளவுக்கு விரும்பத்தகாத செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன.

சமூகத்தில் பொறுப்புவாய்ந்த தலைமுறைகளை உருவாக்க முயலும் பாடசாலை செயற்பாடுகளுக்கு – ஒத்துழைப்பு வழங்காத மாணவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் போது – பாடசாலை நிர்வாகத்துக்கென வரையறை விதிக்கப்படுகிறது.

பெற்றோர்கள் சிலரின் -தம் பிள்ளைகள் தொடர்பான கட்டுப்பாடற்ற வளர்ப்பு முறையே – தவறான கூட்டுக்களுடனான நெறிபுறள்வான நடத்தைகளுக்கு அவர்களை கொண்டுசென்றுவிடுகிறது. இதனால் – முழு சமூகமும் அச்சுறுத்தப்படுகிறது.

பொறுப்புவாய்ந்த இளந்தலைமுறைகள் உள்ள எம் சமூகத்தில் – சிலரின் நெறிமுறையற்ற செயற்பாட்டால் அச்சுறுத்தலுக்குள்ளாகும் வடமாகாண கட்டமைப்பை பாதுகாக்க – சம்பந்தப்பட்ட தரப்புக்கள் இதயசுத்தியுடன் செயற்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தினராக கேட்டுக்கொள்கின்றோம்.

ஆ.தீபன் திலீசன்,
உபதலைவர்,
இலங்கை ஆசிரியர் சங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here