சவூதியில் முதல்முறை பெண்களுக்கு ஓட்டுநர் அனுமதி பத்திரம் விநியோகம்!

0
139

பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு இருக்கும் தடை நீக்கப்படுவதற்கு சில வாரங்கள் உள்ள நிலையில் சவூதி அரேபியா பெண்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதிப்பத்திரம் விநியோகிக்க ஆரம்பித்துள்ளது.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் சவூதி பெண்களின் அனுமதிப்பத்திரங்களை மாற்றும் செயல்முறை கடந்த திங்கட்கிழமை தொடக்கம் அந்நாட்டு பொது போக்குவரத்து இயக்குனரகத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பத்து பெண்கள் தங்களது சர்வதேச ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தை உள்நாட்டு அனுமதிப்பத்திரத்திற்கு மாற்றிக்கொண்டதாக சவூதி அரசு குறிப்பிட்டுள்ளது.

“இந்த பரிமாற்ற செயல்முறை நாட்டின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஜுன் 24 ஆம் திகதி பெண்கள் வீதிகளில் வாகனத்தை செலுத்துவதற்கு வழி ஏற்படுத்துவதாக இது அமைந்துள்ளது” என்று சவூதியின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த வாரமாகும்போது சுமார் 2,000 பெண்களுக்கு வாகன ஓட்டுநர் அனுமதிப் பத்திரம் வழங்க எதிர்பார்த்திருப்பதாக தகவல்தொடர்பு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதில் தலைநகர் ரியாதில் முதல் பெண் ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தை பெறும் வீடியோ சமூகதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பெண்கள் மீது கடும் கட்டுப்பாடுகள் உள்ள நாடுகளில் ஒன்றாக சவூதி அரேபியா உள்ளது.

எனினும் அதன் நீண்ட கால கொள்கையில் மாற்றங்கள் கொண்டுவரும் அரச ஆணையில் மன்னர் சல்மான் கடந்த 2017 செப்டெம்பரில் கையெழுத்திட்டார். இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவதாக அந்த ஆணை குறிப்பிட்டிருந்தது.

இந்த அரச ஆணைக்கு முன்னர் உலகில் பெண்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதிக்காத ஒரே நாடாக சவூதி இருந்தது.

எனினும் பெண்கள் வாகனம் ஓட்ட உரிமை கோரி போராடும் பல பெண் உரிமையாளர்களும் கடந்த மாதம் சவூதியில் கைது செய்யப்பட்டிருந்தனர். தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் இவர்கள் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜுன் 24 ஆம் திகதி சவூதி பெண்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கப்படவிருக்கும் நிலையில் அங்கு ஐந்து நகரங்களில் ஓட்டுநர் பயிற்சி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here