ஆப்கான் தலைநகர் காபுலில் முஸ்லிம் தலைவர்கள் மற்றும் அறிஞர்களின் ஒன்று கூடல் ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
பொலிடெக்னிக் பல்கலைக்கழகத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற இந்த தாக்குலில் பலரும் காயமடைந்திருப்பதோடு உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆப்கான் உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல்தாரி கால்நடையாக வந்து பல்கலைக்கழக வாயிலுக்கு அருகில் வைத்து குண்டை வெடிக்கச் செய்திருப்பதாக அந்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாடெங்கும் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் ஆப்கானில் தற்போது இடம்பெற்று வரும் போர் மற்றும் தற்கொலை தாக்குதல் தொடர்பில் மார்க்கத் தீர்ப்பு வழங்கும் நோக்கில் கூடரம் ஒன்றில் ஒன்றுகூடி இருந்தபோதே இந்த தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஒன்றுகூடல் முடிந்து அதில் பங்கேற்றவர்கள் வெளியே வந்துகொண்டிருந்த வேளையிலேயே தற்கொலைதாரி கட்டிவந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
தற்கொலை தாக்குதல் இஸ்லாத்திற்கு புறம்பானது என்று இந்த அறிஞர்கள் உடன்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கான் தலநகர் மீது அண்மைக்காலத்தில் தலிபான்கள் மற்றும் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.