இயற்கை முறையை ஆதாரமாகக்கொண்ட சிறுதொழில்கள் இன்று அழிந்துவருவதை நாம் அன்றாடம் பார்த்துவருகிறோம். நம் வாழ்நாளில் வேலைக்காகவே அதிக நேரத்தைச் செலவிடுகிறோம். பணிச்சுமை மற்றும் வேலைப்பளுவின் காரணமாக ஏற்படும் சூட்டையும் களைப்பையும் குறைக்க சிறிது ஓய்வு எடுக்க பாய்கள் உதவுகின்றன. உடலுக்கு உற்சாகத்தைத் தரக்கூடிய அற்புதமான ஓர் இயற்கை மருந்துதான் இந்த நார்ப்பாய்கள். ஆனால், அந்தப் பாய்களுக்கு மார்க்கெட்டில் மவுசு என்பது இன்று சற்று மங்கிப்போய்தான் உள்ளது.
`கரூரிலிருந்து வெள்ளைபாறை வழியாகச் சென்றால் சாலிக்கரைபட்டி என்ற ஊரில் குழிப்பாய்களுக்குப் பஞ்சமில்லை’ என்று சொன்ன காலம் போய், இன்று அந்த ஊரே நலிவடைந்துள்ளது. அங்கு இருபது குழிமக்கம் இருந்ததாம். நாளடைவில் அவை மூன்றாகக் குறைந்துபோனதுதான் சோகத்தின் உச்சம்!
மூன்றில் ஒரு குழிமக்கத்தில் கை நெசவு செய்துகொண்டிருந்த சத்தம் காதில் விழுந்தது. அதை நோக்கி நம் கால்கள் சென்றன. இரு கரங்களையும் கூப்பி வணங்கத்தக்க பெரியவர் ஒருவர், மிக வேகமாகக் குழிபாய் ஒன்றை முடைந்துகொண்டிருந்தபடி பாய்களுக்கான பாரம்பர்ய மகத்துவத்தையும் இன்றைய பயன்பாட்டையும் விளக்கினார்.
“என் பெயர் காளியப்பன். வீட்டம்மா பெயர் மாரியம்மாள். எங்களுக்கு பையன் ரெண்டு, பிள்ளை ரெண்டு. அவங்களை வளர்த்து ஆளாக்கியது, படிக்கவெச்சது, கல்யாணம் பண்ணிக்கொடுத்தது எல்லாமே இந்தப் பாயை முடைஞ்சுதான். இந்தத் தொழில்னாலதான் என் குடும்பம் வாழுது. மக்களோட இன்ப துன்பம் உள்பட எல்லா நிகழ்வுகள்லயும் இந்தப் பாய் முக்கியமா விளங்குது. பாய் முடையுறதுதான் எனக்கு பொழப்பே!
தம்பி இந்தக் குழிப்பாய் தொழிலை, கிட்டத்தட்ட நாற்பது வருஷமா செய்றேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இந்த ஊர்ல இருபது பேர் இந்தப் பாய் முடையிற வேலைபார்த்தாங்க. அத்தனை பேரும் கைத்தறிதான். வாரத்துக்கு ஒருமுறை கரூர் டவுனுக்கு வந்து கோரை வாங்கணும். அதுக்குத் தேவையான சாயம் சீமைக்கற்றாழைநார்னு எல்லாத்தையும் வாங்கிட்டு வந்து சைஸுக்கு ஏற்றமாதிரி விதவிதமா பாய் முடைவோம். அதுல என்னென்னவெல்லாம் புதுப்புது ரசனையைச் சேர்க்க முடியுமோ, அதெல்லாத்தையும் சேர்த்து மக்கள் விரும்புற மாதிரி பாயை முடைஞ்சு வித்துக்கிட்டிருக்கிறோம்” என்று பாய் முடையும் விதம் குறித்து விரிவாகக் கூறினார்.
தயாரிக்கும் முறை:
“கோரையைக் கழிக்கணும். சிறுசு பெருசுனு அத்தனையும் கழிக்கணும். பாயிக்குத் தேவையான கோரையா மட்டும் எடுத்து பெரிய கோரை எல்லாம் கிழுச்சு, பெரிய குண்டான்ல தண்ணியோடு நமக்குத் தேவையான சாயங்களையெல்லாம் கலந்து கொதிக்கவைத்து, அதோடு கிழித்து ஊரவைக்கப்பட்ட கோரைகளைச் சேர்த்து வேகவைச்சு வெயிலில் காயவைக்கணும். அப்படிக் காயவைத்த கலர் கோரைகளை எடுத்துப் பயன்படுத்தலாம். நார்களை ராட்டைக்கொண்டு திரிச்சுவெச்சுக்கிட்டு அதைக் கரந்துகட்டி பாய் போடணும். இந்த வேலை ரொம்பவும் கஷ்டமான வேலை தம்பி. இதை அவ்வளவு சுலபமா யாரைலயும் கத்துக்க முடியாது. முதல்ல பார்க்கணும், பிறகு பழகணும், முயலணும். அப்புறம்தான் கத்துக்க முடியும். நானே இதை ரொம்ப நாள் பழகி பயிற்சி எடுத்த பிறகுதான் கத்துக்கிட்டேன்.
எங்களையெல்லாம் நல்லமுறையில் கரை சேர்த்த இந்தக் குழிமக்கம் மட்டும் குழிக்குள்ளேயே கிடக்கு. இந்தத் தொழிலைத் தூக்கி உயர்த்த அரசு உள்பட யாருமே முன்வரலை. இன்னிக்கு ஆடம்பர வாழ்கைக்கு அடையாளமா பஞ்சுமெத்தையில தூங்குற மக்கள் எல்லாருமே ஒருகாலத்துல இந்த நார்பாய்ல தூங்கினவங்கதான். அப்போவெல்லாம் நார்ப்பாயைத்தான் அதிகம் விரும்பி வாங்குவாங்க. எத்தனையோ ஜவுளிக் கடைகளுக்கும், விழாக்களுக்கும், மசூதிகளுக்கும், உடற்பயிற்சி மையத்துக்கும், வீடுகளுக்கும் விற்பனை செஞ்சிருக்கோம். பகல்பூரா நாயா பேயா வேலை செஞ்சுட்டு, பொழுது சாய வீட்டுக்கு வந்து இருக்கிற சோறை உருட்டி வாயிலப் போட்டுக்கிட்டு இந்த நார்ப்பாயை விரிச்சுப் படுத்தா… ஆஹா! எவ்வளவு சுகமா இருக்கும் தெரியுமா? தூங்குறதே தெரியாது. இந்தச் சுகத்தை அனுபவிக்கணும்னா நல்லா உழைக்கணும், அப்படி உழைச்ச காசுல சாப்பிட்டு படுத்துப்பாருங்க… லட்சம் ரூபா இனாமா தந்தாலும் இந்தச் சுகம் கிடைக்காது. உடம்புக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு நிம்மதியும் தருது இந்த நார்ப்பாய்” என்றவர், குழிமக்கம் குறித்து விளக்கினார்.
குழிமக்கம்கிறது ரெண்டரை அடி ஆழமும் அகலமும்கொண்டது. வழக்கமாக பாய் முடையுறதைவிட இது கொஞ்சம் மாறுபடும். குழிமேல உட்கார்ந்து ரெண்டு விழுதையும் மேலே இருக்கும் தண்டால் இணைச்சு மக்கத்தால் கோக்கபட்ட இணைப்பை மேலே கீழே இழுப்பதற்கு குழிக்குள் இருக்கும் ரெண்டு கயிறுகளையும் கையால் மக்கத்தை அடிக்கணும். கிச்சாலி குச்சியால் கோரையைக் கோத்து நேசவு செய்யணும்” என்று ஒரு பாயை முடைந்தும் காண்பித்தார்.
(நன்றி : விகடன்)