கடந்த அரசாங்கத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற 3 கோடியே 50 இலட்சம் ரூபா கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவு இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
கடந்த ஆண்டில் பெற்றோலிய கூட்டுத்தாபனம், எரிபொருளை இறக்குமதி செய்த சந்தர்ப்பத்தில் துறைமுகத்தின் பிரதான எண்ணெய்க் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு சேதமடைந்திருந்தமையினால் எரிபொருள் தொகையை கரைக்குக் கொண்டு வருவதற்காக லூனா என்ற நிறுவனத்திடம் இருந்து சிறிய ரக கப்பல் ஒன்று வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இதன் போது இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் குறித்து விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவு, இன்று முன்னாள் பெற்றோலிய அமைச்சரான அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் விளக்கம் கோருவதற்காக அழைத்திருந்தது.
4 மணித்தியாலம் விளக்கம் கோரி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது முன்னாள் அமைச்சர் ஊடகவியலாளர்களை சந்திக்காது வெளியேறியிருந்தார்.
விசாரணைகள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிடுகையில், சிறிய ரக கப்பல் வாடகைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொறிமுறை சிக்கலானதாகக் காணப்படுகிறதென தகவல் கிடைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட மூன்றரைக் கோடி ரூபா நட்டம் குறித்து பொலிஸ் தலைமையகத்தின் விஷேட விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது, என்றார்.