நோபல் பரிசு பெற்ற தமிழ் விஞ்ஞானி ராயல் சொசைட்டியின் தலைவராகிறார்!

0
118

venky-512பிரிட்டனின் பிரசித்தி பெற்ற அறிவியல் கழகமான, ராயல் சொசைட்டியின் அடுத்த தலைவராக, தமிழ்நாட்டில் பிறந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானியான, வெங்கி ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வெங்கி ராமகிருஷ்ணன் தமிழ் நாட்டின் சிதம்பரத்தில் பிறந்தவர். பரோடா பல்கலைக் கழகத்தில் இயல்பியல் துறையில் பட்டம் பெற்ற இவர், பின்னர் அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பட்டம் பெற்றார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆய்வாளராகப் பணிபுரியும் வெங்கி ராமகிருஷ்ணன் 2009ம் ஆண்டில் ரசயானத்துக்கான நோபல் பரிசை கூட்டாக வென்றார். உடலின் செல்களில் புரதச்சத்தை உற்பத்தி செய்யும் ரிபோசோம்களைப் பற்றி அவர் செய்த ஆய்வுகளுக்காக அவர் இந்தப் பரிசை வென்றார்.

இப்போது அவர் லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

வெங்கி ராமகிருஷ்ணன் வரும் டிசம்பரில் தற்போது பதவியில் இருக்கும் சர் பால் நர்ஸுக்கு அடுத்தபடியாக, இந்தப் பதவிக்கு வருவார். அடுத்த 5 ஆண்டுகள் இவர் பதவி வகிப்பார்.

ஐசக் நியூட்டன் வகித்த பதவி

ராயல் சொசைட்டியின் கவுன்சில் புதன்கிழமை இவரது நியமனத்தை உறுதிசெய்தது.

தான் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது குறித்து பெரிதும் கௌரவமடைவதாக வெங்கி ராமகிருஷ்ணன் பிபிசியிடம் பேசுகையில் தெரிவித்தார்.

இந்தப் பதவி பிரிட்டிஷ் விஞ்ஞான உலகில் மிக முக்கிய பதவிகளில் ஒன்று.

ராயல் சொசைட்டி 1660ம் ஆண்டிலிருந்து இயங்கிவருகிறது. அதன் தலைவராக இருப்பவர் பிரிட்டனில் விஞ்ஞானத்துக்காக உழைக்கும் முக்கியமான பிரமுகராக இருப்பார்.

ஈர்ப்புத் தத்துவத்தைக் கண்டறிந்த புகழ் பெற்ற விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் இந்தக் கழகத்தின் தலைவராக இருந்தவர்களில் ஒருவர்.

நான் அமெரிக்காவில் இருந்து 16 ஆண்டுகளுக்கு முன்னர்தான் பிரிட்டனுக்கு வந்தவன் என்ற பின்னணியில், என்னை இந்த பதவிக்கு ராயல் சொசைட்டி தேர்ந்தெடுத்திருப்பது குறித்து நான் பெருமையாக உணர்கிறேன்” என்றார் வெங்கி ராமகிருஷ்ணன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here