கடும் மழை காரணமாக முல்லை மாவட்டத்திலுள்ள குளங்களின் நீர்மட்டத்தின் அளவு அதிகரித்து உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளன.
இவ்வாறு அபாய நிலையை எட்டியுள்ள குளங்களை அந்தந்த பகுதியைச் சேர்ந்த கமக்கார அமைப்பினுடைய நீர்ப்பாசன உதவியாளரோ அல்லது கமக்கார அமைப்பினரோ நேரில் சென்று பார்வையிட்டு ஏற்படும் அபாய நிலைமை மற்றும் பிரச்சினைகளை உடனடியாக அந்தந்தப்பகுதிக்குரிய கமநல சேவை நிலையங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என ஒலுமடு கமநல சேவை நிலைய அதிகாரி கேட்டுள்ளார்.
உரிய கமநல சேவை நிலையத்தினர் அந்த இடத்திற்கு வருகை தந்து குளத்தை பார்வையிட்டு மேலதிக நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்குமென அவர் தெரிவித்துள்ளார்
தேவை ஏற்படின் வெற்று உரப்பைகளை கமநல சேவை நிலையங்களில் இருந்து பெற்று அதனுள் மண் நிரப்பி அணைகளை அமைக்குமாறு அவர் கோரியுள்ளார்.
இதனூடாக குடிமனையினுள் செல்லும் வெள்ளத்தை நிறுத்த முடியும். அத்தோடு ஒலுமடு கமநல சேவைக்குட்பட்ட குளங்களான தச்சடம்பன், ஒலுமடு, கற்கிடங்கு பனிக்கன்குளம் குஞ்சு முறியாக்குளம், கிழவக் குளம், கரிப்பட்ட முறிப்பு, புல் வேலன் குளம், முறியாக்குளம், மரக்குத்திக்குளம் ஆகிய குளங்கள் வான் பாய்வதாகவும் பெரிய புளியங்குளம் 5.5 அடி யாகவும் ஐயங்கன் குளம் 6.5 அடி யாகவும் பள்ளன்குளம் 4 அடியாகவும் மனவாளன்பட்டமுறிப்பு 4 அடியாகவும் அம்பகாமம் 9 அடியாகவும் புலுமச்சிநாதகுளம் 6.5 அடியாகவும் மதவுவைத்தகுளம் 4 அடியாகவும் ஆசைப்பிள்ளைக்குளம் 5 அடியாகவும் நீர் கிடைக்கப் பெற்று நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.