ஆப்கானிஸ்தானிய தலைநகரில் புனித நூலை எரித்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் சினமடைந்த கும்பலொன்றால் அடித்து உதைக்கப்பட்டு எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர் அவரது சடலம் சகதி நிறைந்த ஆறொன்றில் வீசப்பட்டுள்ளது.
பர்குன்டா என சுருக்கப் பெயரால் அழைக்கப்பட்ட மேற்படி 27 வயது பெண், காபூல் நகரின் மத்தியிலுள்ள ஷாஷ் – ஈ- டொஹ் ஷம்ஷிரா புனித ஸ்தலத்திற்கு அண்மையில் வைத்து ஆண்களைக் கொண்ட கும்பலொன்றால் அடித்து உதைக்கப்படுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்போது மேற்படி கும்பல் மரக்கட்டைகளையும் கற்களையும் பயன்படுத்தி அந்தப் பெண்ணை தாக்கியுள்ளது.
அந்த கும்பலைச் சேர்ந்த சில ஆண்கள் அந்தப் பெண்ணை கீழே தள்ளி கால்களால் உதைத்து தமது சினத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அந்தப் பெண்ணின் உடல் அந்தப் பிராந்தியத்திலுள்ள ஆற்றங்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டு அவரது சடலம் ஆற்றில் வீசப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான பிரதேசவாசிகள் கூடியிருந்து வேடிக்கை பார்க்க இந்த படுகொலை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை பொலிஸார் கைதுசெயதுள்ளனர்.
இது தொடர்பில் பர்குன்டாவின் பெற்றோர் விபரிக்கையில், தமது மகள் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் எனவும் அவர் திட்டமிட்டு புனித நூலை எரிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிய உள்துறை அமைச்சின் பேச்சாளர் செதீக் செதீக்கி தெரிவித்தார்.