ஞாபகச் சின்னமெனக் கடந்து செல்வதற்கு யாழ்ப்பாண நூலகம் தாஜ்மஹல் அல்ல, தென்னாசியாவின் ஞானப் பெருஞ்சின்னம். ஆனால் அது இருந்த இடம்தான் பிரச்சினை.
கொழும்பிலே இருந்திருந்தால் இருந்திருங்கும்; கண்டியிலே இருந்திருந்தால் இருந்திருக்கும்; அனுராதபுரத்தில் இருந்திருந்தால் இருந்திருக்கும், ஆனால் அது யாழ்ப்பாணத்திலல்லவா இருந்தது! அதுதான் சாம்பலாக்கிவிட்டனர் சண்டாளர்.
தமிழரின் வரலாற்று ஆவணங்கள் அத்தனையையும் அழித்துவிட்டால் மகாவமிசத்தையும் சூளவமிசத்தையும் வரலாறாக்கி வந்தேறிச் சிங்கள அடைமொழியை நீக்கிவிடலாமென்று அன்றைய பேரினவாத அரசாங்கம் கருதியிருக்கலாம். அதில் பெரும்பாலான விடயங்கள் நிறைவேறியும் விட்டன.
இன்று ஐ.நாவில்கூட தமிழனுக்கு நீதி கிடைக்காத வகையில் சிங்களத்தின் அன்றைய திட்டம் பலமாகப் பொருந்திவிட்டது.
தாமே நூலகத்தை எரித்துவிட்டு பழியை சிங்களக் காடையர்மீது சுமத்தியது அன்றைய பேரினவாத அரசு. அன்றைய சூழ்நிலையில் தமிழருக்கு தனிநாடு கிடைத்துவிடுமோ என்ற ஐயத்தில், அப்படிக் கிடைத்துவிட்டால் அந் நாட்டுக்கே இந்த நூலகம் தனிப்பெரும் கௌரவத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிடுமே என்ற இயலாமையின் உச்சக் கட்டத்திலேயே இவ் அளப்பெரிய படுபாதகத்தை நிறைவேற்றியுள்ளனர்.
அன்று சாம்பலாக்கிய அந்தச் செல்வங்கள் இன்று இருந்திருந்தால் மகாவம்சத்தின் அத்தனை கருத்துப் பிழைகளையும் ஆயிரமாயிரம் ஆய்வுகள் தோன்றி உடைத்தெறிந்திருக்கும். ஆனால் காலமும் காலனும் அவர்கள்
பக்கமே நின்றதனால் நாம் தோன்றிய மண்ணில் நாமே நடைப்பிணமாகிவிட்டோம்.
மீண்டும் மீண்டும் என்னை எரித்துக் கருக்கினாலும் என் வெள்ளை உள்ளத்தைச் சுவரெங்கும் காட்டி நிமிர்ந்து சிரிப்பேன் என இப்பொழுது கம்பீரமாக நிற்கின்றது எம் ஞானச்சின்னம்.
இலங்கை முழுவதும் உள்ள நூலகங்களிடையே யாழ்ப்பாணப் பொது நூலகம் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கான அறிவிப்பு அண்மைய வருடங்களில் கூறப்பட்டது. நாங்கள் பீனிக்ஸ் பறவைகள் என்பதை யாழ் நூலகம் நிரூபிக்கத்தொடங்குகின்றது.
ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பேசப்பட்டு தென்கிழக்காசிய நாடுகளிலேயே முதலாவது நூலகமாக கோலோச்சிய யாழ் நூலகம் சிங்கள இனவாத நெருப்பால் எரியுண்டுபோனது.
எரிந்துகொண்டிருந்த காட்சியை நேரில் கண்ட யாழ்ப்பாணப் பாதிரியார் கலாநிதி தாவீது அடிகளார், அதிர்ச்சி தாங்காது அடுத்தநாள் விடிகாலை உயிரை மாய்த்துக்கொண்டார்.
அதன்பின்னர் பல போர்களின் சன்னங்களைத் தாங்கியதாக கவனிப்பாரற்ற அனாதை போல காணப்பட்ட நூலகம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
இன்று ஏராளமான புத்தகங்களைத் தாங்கியதாக மிளிர்கின்றது. ஸ்ரீ லங்காவின் தேசிய வாசிப்புமாதத்தை ஒட்டி அகில இலங்கை நூலகங்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டியிலேயே யாழ்ப்பாணப் பொது நூலகம் அண்மையில் முதலாம் இடத்தைப் பெற்றது. இதில் இரண்டாவது இடத்தினை நாவலப்பிட்டி நூலகமும் மூன்றாவது இடத்தினை வாரியபொல நூலகமும் பெற்றுக்கொண்டன.
பல அறிவுச் சுவடிகலையும் பண்டைய ஓலைச் சுவடிகளையும் கொண்ட யாழ்ப்பாண நூலகம் எரிந்துபோனமை வரலாற்றில் மீழமுடியாத ஒரு கறைபடிந்த பேரிழப்பாகும். மீண்டும் உலகளவில் யாழ் நூலகம் பேசப்படவேண்டும் என்பதே மானுட தர்மத்தை நேசிக்கும் ஒவ்வொருவரினதும் வேணவாவாகும்.