பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ப.ஜெயக்குமாரியின் மகளான விபூசிகாவை தாயாருடன் செல்வதற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரி பிணையில் விடுவிக்கப்பட்ட போதும் அவரது மகளான விபுசிகா நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கிளிநொச்சியில்
இயங்கி வரும் மகாதேவா சைவச்சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார் விபுசிகாவை சிறுவர் இல்லத்தில் இருந்து பொறுப்பேற்பதற்கு அவரது தாயான ஜெயக்குமாரி கண்டாவளை பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரி ஊடாக விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில் இம்மனு மீதான விசாரணை நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நீதவான் எம்.ஐ.வகாப்தீன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது கண்டாவளை பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரியுடன் விபுசிகா மற்றும் அவரது தாயார் ஆகியோர் ஆயராகி இருந்தார்.
ஜெயக்குமாரி சார்பாக ஆயரான சட்டத்தரணிகளான திருமதி.எஸ்.விஜயராணி, ம.கிறேசியன், சுந்தரேசசர்மா, துசியந்தி, றைகான், ஆகியோர் ஆயராகி குறித்த சிறுமியை பெற்றோருடன் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
அதன்போது ஜெயக்குமாரியும் அவரது மகளான விபுசிகாவும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என பயங்கரவாத புலனாய்வுப்பிரிவினரால் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டுள்ளதாலேயே குறித்த சிறுமி சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து விபுசிகா குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரே தயாரிடம் இணைவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கும் என நீதிவான் எம்.ஐ.வகாப்தீன் குறிப்பிட்டதுடன் எதிர்வரும் 26ஆம் திகதிக்கு குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.