1987ஆம் ஆண்டு வடமராட்சி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கையின்போது இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் வடமராட்சி, திக்கம் கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
வடமராட்சியை கைப்பற்ற ஒப்பரேஷன் லிபரேசன் என்ற பெயரில், கடந்த 1987ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி தொடக்கம், 31ஆம் திகதி வரை இராணுவம் படை நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் போது, 1987ஆம் ஆண்டு மே மாதம் 29, 30, 31ஆம் திகதிகளில் வடமராட்சி, அல்வாய், மாலு சந்தி, திக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இராணுவம் மேற்கொண்ட ஷெல் வீச்சுத் தாக்குதலில் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். அந்தச் சம்பவம் நடந்தேறி நேற்று 31 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நினைவுகூர்ந்து நேற்று அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. 29.05.1987ஆம் ஆண்டு அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தஞ்சம் புகுந்தவேளை இலங்கை இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட அல்வாய்க் கிராம மக்கள் அந்தக் கிராமத்தவர்களால் நினைவுகூரப்பட்டனர். திக்கம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களை திக்கம் கிராம மக்கள் நேற்று அஞ்சலித்தனர்.