இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமாக கடந்த 25 வருடங்களாக இருந்த வசாவிளான் கிழக்குப் பகுதியை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டதற்கமைய இன்று அங்கு சென்ற மக்கள் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படாததால் பெரும் ஏமாற்றத்துடன் கண்ணீருடன் திட்டித் தீர்த்துக் கொண்டு சென்றனர்.
மேலும் விடுவிக்கப்பட்ட பகுதிகளையும் முழமையாகப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் தமது காணிகள், வீடுகள் அடையாளம் தெரியாது அழிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
அதேவேளையில் அறிவிக்கப்பட்டதற்கமைய என்றாலும் மக்கள் வாழ்வதற்கு விடுவிக்க வேண்டிய நிலங்கள் விடுவிக்காது வெறும் காட்டையும் றோட்டையும் காட்டுவதற்காக விடுவித்தனர் என்றும் மகிந்த அரசைப் போன்று மைத்திரி அரசும் யாரை ஏமாற்றப் பார்க்கின்றனர் என்றும் கேள்வியெழுப்பியதுடன் உலகமே அரசின் ஏமாற்று நாடகத்தை நம்பாதே என்றும் கவலையுடன் தெரிவித்தனர்.
இராணுவத்தினரால் கபளீகரம் செய்யப்பட்டு கடந்த 25 வருடங்களாக இரானுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வலிகாமம் வடக்கு, கிழக்குப் பகுதிகளை விடுவித்து மக்களை மீளக்குடியமர்த்த வேண்டுமென தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து போராட்டங்களையும் மேற்கொண்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னராக இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருக்கின்ற காணிகளில் முதற்கட்டமாக ஆயிரம் ஏக்கரை விடுவித்து மக்களை மீளக்குடியமர்த போதாக புதி அரசின் மிள்குடியேற்ற அமைச்சர் அறிவித்திருந்தார். இதற்கமைய மீள்குடியேற்ற நடவடிக்கைக் குழுவொன்றையும் அமைத்திருந்தார்.
இதனடிப்படையில் வலி கிழக்கின் வளலாயில் 233 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டு மக்கள் சென்று பார்வையிட்டிருக்கின்றனர். அதே போன்று வலி வடக்கின் வயாவிலான் கிழக்கில் 197 ஏக்கர் இன்று விடுவிக்கப்பட்டு மக்கள் சென்று பார்வையிட அனுமதிக்கப்பட்டது. இதற்கமைய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து கடந்த பல வருடங்களின் பின்னர் தமது சொந்த நிலத்திற்கு செல்வதற்காக இடம்பெயர்ந்து யாழ் மாவட்டத்திற்குள் முகாம்களிலும் நண்பர்கள், உறவினர்கள் விடுகளிலும் மாவட்டத்திற்கு வெளியில் ஏனைய மாவட்டங்கிளிலிம் இருக்கின்ற மேற்படி பிரதேச மக்கள் பல நூற்றுக் கணக்கானோர் வருகை தந்திருந்தனர். இதற்கமைய தமது சொந்த நிலங்களுக்குச் செல்கின்றோம் என்ற பெரும் ஆவலுடன் மக்கள் வருகை தந்திருந்த போதும் பின்னர் பெரும் ஏமாற்றத்துடனேயே திரும்பியிருந்தனர்.
இதன்போது அங்கு சென்ற மக்கள் இராணுவ உயர்பாதுகாப்பு வலய எல்லையிலிருந்து தமது காணிகளை தேடிச் சென்றனர் ஆயினும் அங்கு தமது காணிகள், வீடகளின் அடையாளம் தெரியாது தேடி அலைந்து திரிந்தனர். அதாவது விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட இடங்கள் விடுவிக்கப்படவில்லை. காணிகள் வீடுகள் இடம்தெரியாது பற்றைக்காடுகளாக அழிக்கப்பட்டிருக்கின்றது. இந்து ஆலயங்கள், தேவாலயங்கள் அழிக்கப்பட்டு புத்தர் கோவில்கள் கட்டப்பட்டிருக்கின்றது. இவற்றைப் பார்த்த மக்கள் கண்ணீர் விட்டு கதறியதுடன் திட்டித் தீர்த்துக் கொண்டதுடன் தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
இருந்த போதும் தொடர்ந்து தமது காணிகளைத் தேடி அலைந்த திரிந்தனர். ஆயினும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து இடங்களிற்கும் செல்வதற்கு அனுமதியளிக்கவில்லை. அதே வேளை சென்று வருவதற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் எந்த வீடுகளுமற்ற நிலையில் பற்றகைள் வளர்ந்து காடுகளாக காட்சியளித்தன.
இதனை நேரடியாகப் பார்த்த மக்கள் கவலை வெளியிட்டதுடன் இராணுவத்தினரின் பாவனையில் இருக்கின்ற வீடுகள் மட்டும் எவ்வாறு நல்ல நிலையில் இருக்கின்றது என்றும் எனைய வீடுகளை ஏன் அழித்தனர் என்றும் கேள்வியெழுப்பினர். மேலும் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட காணிகளை பார்ப்பதற்காக விடுவிக்க வேண்டுமென்றும் கோரினர்.
ஆயினும் இதற்கு படையினர் அனுமதி வழங்கவில்லை. விடுவிக்கப்பட்ட பகுதியிலும் எல்லை அமைத்து அதற்கு அப்பால் செல்ல முடியாது என்று கூறினர். அங்கு இரானுவத்தினர் முகாம் அமைக்கும் பணிகள், பாதுகாப்பு எல்லைகள் அமைக்கும் பணிகளில் தெடர்ந்து ஈடுபட்டு வருகின்றதையும் அவதானித்தனர்.
இவ்வாறு அங்குள்ள நிலைமைகளையும் இரானுவத்தினரின் செயற்பாடுகளையும் பார்த்த மக்கள் ஆவேசமடைந்து பலரையும் திட்டித் தீர்த்துக் கொண்டனர். குறிப்பாக வீடுவிக்க வேண்டிய நிலங்கள் விடுவிக்கவில்லை. குறுகிய நிலத்தை விடுவித்து அதற்கு முன்னாலும் பின்னாலும் இரானுவ உயர் பாதுகாப்பு வலயம் அமைக்கின்றனர். அவ்வாறாயின் மக்கள் எவ்வாறு நிம்மதியாக இருக்க முடியும். மீள்குடியேற்றம் எனக் கூறி யாரை ஏமாற்றப்பார்க்கின்றனர்.
எங்களை மீள்குடியேற்றம் செய்யப் போவதாகக் கூறி இராணுவத்தினர் என்ன செய்கின்றனர். விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டதை விடவும் இல்லை விட்டதைப் பார்க்கவும் இல்லை. இதற்காகவா நாம் இங்கு வந்தோம். அத்தோடு எங்கள் கண்முன்னாடி எங்கள் காணிகளை இராணுவம் அழிப்பதையும் ஆக்கிரமிப்பதையும் பார்ப்பதற்காக எம்மை அழைத்து வந்தார்கள், சொந்த மண்ணை தொடர்ந்தும் ஆக்கிரமித்து வைத்திருக்கவொ அல்லது அழிப்பதற்கு இடமளிக்கவோ முடியாது எமது மண்னுக்குச் செல்கின்றோம் என்று ஆவலுடன் வந்த நாம் இன்று அழுகுரலுடனேயே செல்கின்ற நிலையே இருப்பதாக தெரிவித்துச்சென்றிருந்தனர்.