Home ஈழச்செய்திகள் யாழில் காலைக்கதிர் பத்திரிகை செய்தியாளர் மீது வாள்வெட்டு!

யாழில் காலைக்கதிர் பத்திரிகை செய்தியாளர் மீது வாள்வெட்டு!

0
276

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகை பிரதேச செய்தியாளர் மற்றும் பத்திரிகை விநியோகஸ்தர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்களால் இன்று அதிகாலை வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா இராஜேந்திரன் (வயது -55) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை துண்டிச் சந்தியில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் ஐந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பத்திரிகை விநியோகத்துக்கு சென்று திரும்புகையில் யாழ்ப்பாணம், கொழும்புத்துறை துண்டிச் சந்தியில் வழிமறித்த 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாகத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

குறித்த தாக்குதலை மேற்கொண்ட 10 பேரும் முகத்தை துணியால் மறைத்திருந்ததுடன் அவர்களிடம் கைக்கோடாரி, வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர்கள் மீது கடந்த காலத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில்  ஊடகவியலளார்கள் மீது வாள் வெட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் கனகராசா சரவணன் தெரிவித்தார்.

யாழில் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தை கண்டித்து அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் கடந்த 1985 ஆம் ஆண்டு தேவராசா முதல் 2009 ஆம் ஆண்டு சசிமதன் வரை இதுவரை 45 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல ஊடக நிறுவனங்கள் மீதும் தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட 45 ஊடகவியலாளர்களுள் 36 பேர் தமிழ் ஊடகவியலாளர்கள் ஆவர். எனினும் இவர்களது படுகொலை சம்பந்தமாக இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாமையானது வேதனை அளிக்கிறது.

இந் நிலையில் நாட்டில் தற்போது துப்பாக்கிக்கு பதிலாக வாள்வெட்டு மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனவே யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here