தூத்துக்குடி தமிழக அரச பயங்கரவத்தைக் கண்டித்து அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது அதில்,
இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் மையப்புள்ளி தமிழகமும் தமிழீழமுமாகும், மையப்புள்ளியில் தமிழருக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி !
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நேற்று 100-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சனநாயக ரீதியிலான ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது காவல் துறையினருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் வெடித்ததில் காவல்துறையினர் சரமாரியாக மக்கள் கூட்டத்தை நோக்கிச் சுட்டதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 3 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில் தொப்பிள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் சார்பில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையும் தமிழகமக்களின் இந்தத் துயரச் சம்பவத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து பலர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் எமது தமிழக தொடர்பாடல் ஊடாகத் தெரியவந்துள்ளது.
இந்தப் பெருந்துயர வன்கொடுமைகளைக் காவல்துறையினர் அரங்கேற்றியிருப்பது சட்டம் – ஒழுங்கை காப்பாற்றுவதற்காகத் தான் என்று சொன்னால் அது ஏற்புடையதல்ல. இது திட்டமிட்ட கொடூரமான அரச பயங்கரவாத ஒடுக்குமுறை என்றே கூறவேண்டம். இனி எப்போதும் பொதுமக்கள் ஓரிடத்தில் பல்லாயிரக் கணக்கில் ஒன்றுகூடும் எண்ணம் என்றுமே எழக் கூடாது என்கிற சிந்தனையில் முடிவெடுத்து நிகழ்த்தப்பட்ட கூட்டுப் படுகொலை ஆகும்.
அரச பயங்கவாதத்தின் கொடுந்துயர நாளாக மே 22-ம் தேதி அமைந்துவிட்டது. தமிழகத்தின் வரலாற்றில் இச்சம்பவமானது மிகப்பெரிய கறையை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த விதத்தைப் பார்க்கும் போது அதிரடிப்படை வீரர்கள், தானியங்கித் துப்பாக்கியை உபயோகப்படுத்தியுள்ளது இதுதான் முதல் முறை ஆகும். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
காவல்துறை வாகனங்களின் மீது ஏறி நின்ற அதிரடிப்படை வீரர்கள் பொதுமக்களை ராணுவ வீரர்கள் போல் குறிவைத்துச் சுடுவது இதுவரை இல்லாத ஒன்று என காவல்த்துறை அதிகாரிகளே ஒப்புக்கொள்கிறார்கள். எஸ்.எல்.ஆர் வகை துப்பாக்கியை காவல்துறையினர் உபயோகப்படுத்தியுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிராகவும்… தீவிரவாதிகளுக்கு எதிராகவும்… கொலையாளிகளுக்கு எதிராகவும்… கொள்ளைக்காரர்களுக்கு எதிராகவும்… குறிபார்த்து தோட்டாவை துப்ப வேண்டிய துப்பாக்கிகள் உரிமை கேட்டு போராடும் நிராயுதபாணிகளான தமிழர்கள் உடல் மீது உமிழ்ந்தது மன்னிக்க முடியாத கொடுஞ்செயல்!
ஆனி 5ம் திகதி 2018 இல் இந்தியா ஐநாவின் ஆதரவுடன் உலகசுற்றுச் சூழல் நாளை ”பிளாஸ்டிக்மாசடைவைஇல்லாதொழிப்போம்” என்ற கோசத்துடன் கொண்டாட இருப்பதால் ஐநா சுற்றுச் சூழல் தலைவர் திரு எரிக் சூல்கைம் கலந்து கொள்ள உள்ள நிலையில் சுற்றுச் சூழல் மாசடைவு சம்பந்தமாக நடைபெறும் தூத்துக்குடி எதிர்ப்பலை ஒரு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் தான் இக் கொடுங்செயல் புரிந்து மக்களை அடக்க முனைகின்றது இந்திய அரசு. மத்திய அரசு தனது இராணுவப் படைகளை தமிழ்நாட்டுக்கு அனுப்ப முனைப்புக் காட்டியதில் இருந்தே புரிந்துகொள்ளலாம் இதன் உள்நோக்கம் என்னவென்று. 2018 ம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டங்களின் ஒரு பெரிய உலகளாவிய புரவலராகத் தன்னைக் காட்டிக்கொள்ள எத்தனிக்கும் இந்தியா, மாசடையும் தூத்துக்குடியை மறைக்க என்ன விலைகொடுக்கவும் தயார் என்பதையே 14 அப்பாவித் தமிழர்களின் சாவு கோடிட்டுக் காட்டுகின்றது.
இக்கொடுஞ்செயலால் படுகொலை செய்யப்பட்ட தமிழக உறவுகளின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், தமிழக மக்களின் சனநாயக ரீதியிலான போராட்ட முன்னெடுப்புக்களுக்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தொப்பிள்கொடி உறவுரிமையுடன் எமது ஆதரவைத் தொடர்ந்தும் வழங்கும் என்பதனைத் தமிழ்ப்பற்றுடன் தெரிவித்துக்கொள்கிறது.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை.
இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது .