பிரித்தானியாவில் தஞ்சமடைந்த அகதி ஒருவரை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்தும் திட்டம் இறுதி நிமிடத்தில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கண்ணன் காளிமுத்து எனும் 36 வயதான இவர் தமிழீழ காவல்துறையின் முன்னாள் உறுப்பினராவார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் குடும்ப உறவுகளைப் பிரிந்த இவர் அரசாங்கப் படையினரிடம் சரணடைந்ததாக வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு தப்பிச் செல்லும் முன்னர் கண்ணன் காளிமுத்து பல்வேறு சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார். மேலும் உயர் பாதுகாப்புடைய பிரித்தானிய குடிவரவு அகற்றுதல் மையத்தில் முன்னதாக இவர் இரண்டு முறைகள் தற்கொலை முயன்றதாகவும் தெரியவந்துள்ளது.
நாடுகடத்தும் செயற்பாடு அவரது மனநிலையை மேலும் பாதிக்கும் எனவும் அவர் தற்கொலைக்கு மீண்டும் முயல வாய்ப்புள்ளதாகவும் உளவியலாளர் ஒருவர் எச்சரித்திருந்தார். இந்தநிலையில் காளிமுத்துவின் வழக்கறிஞர் இந்த நாடுகடத்தும் செயற்பாட்டுக்கு எதிராக அவசரத் தடையுத்தரவை பெற்றுக் கொண்டுள்ளார்.