தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு : உயிரிழப்பு 12-ஆக உயர்வு !

0
322

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கார்த்திக் என்பவர் உயிரிழந்தார். கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

துப்பாக்கிச்சூட்டில் ஏற்கனவே 11 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் கார்த்தி உயிரிழப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலெக்டர் அலுவலக கண்ணாடி கதவுகள் உடைக்கப்பட்டு சூறையாடப்பட்டது. அங்கு நிறுத்தியிருந்த வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. ஸ்டெர்லைட் குடியிருப்புக்கும் தீவைக்கப்பட்டது. திரும்பிய பக்கமெல்லாம் கலவரம் சூழ்ந்ததால், தூத்துக்குடி மாநகரமே ரணகளமாக மாறியது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 100 நாட்களாக பொதுமக்கள் பல்வேறு கிராமங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் 100வது நாளான நேற்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்தது. ஆனால், இதற்கு போலீசார் அனுமதியளிக்க மறுத்து விட்டனர். இந்நிலையில் தூத்துக்குடி சிப்காட், தென் பாகம் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்து நேற்று முன்தினம் இரவு கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவிட்டார். முன்னெச்சரிக்கையாக போராட்டக் குழுவினர் சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த போராட்ட அறிவிப்பால் தூத்துக்குடியில் டிஐஜி கபில்குமார் சரத்கர் தலைமையில் தூத்துக்குடி எஸ்பி மகேந்திரன், நெல்லை எஸ்பி அருண்சக்திகுமார், நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுகுணாசிங் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். எனினும் 144 தடை உத்தரவை மீறி நேற்று காலை முதலே போராட்டக்குழுவினர் பல்வேறு இடங்களில் கூடினர். தூத்துக்குடி பீச் ரோட்டில் அமைந்துள்ள பனிமய மாதா ஆலய வளாகத்தில் திரண்டிருந்த பொதுமக்களை போலீசார் தடுத்தனர். ஆனால் தடையை மீறி அவர்கள் செல்ல முயன்ற போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. தூத்துக்குடி விவிடி சிக்னல், 3வது மைல், மடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திற்குள் போராட்டத்தினர் புகுந்து விடாமல் தடுத்தனர். ஆனால் பல திசைகளில் இருந்தும் வந்த போராட்டக் குழுவினர் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி முன்னேறத் தொடங்கினர். அவர்களை கட்டுப்படுத்தத் தேவையான போலீசார் இல்லாததால், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.

போராட்டக் குழுவினர் அனைவரும் வி.வி.டி. சிக்னல் பகுதியில் வந்தபோது அங்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் தலைமையிலான போலீசார், ஊர்வலத்தில் வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வைத்திருந்த பேரிகார்டுகளை தூக்கியெறிந்தபடி போராட்டக் குழுவினர் முன்னேறினர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். குறிப்பாக ராஜாஜி பூங்கா வரையிலும் விரட்டிச்சென்று சரமாரியாகத் தாக்கினர். இதனால் ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கினர். அத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வேனை அடித்து நொறுக்கி சாய்த்தனர். போராட்டக்காரர்களின் தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் போலீசார் அங்கிருந்து பின்வாங்கி ஓட்டம் பிடித்தனர்.

இதனிடையே திட்டமிட்டபடி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றனர். 3வது மைல் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்ததால் அங்கும் பாதுகாப்புக்கு நின்றிருந்த குறைந்தளவு போலீசாரால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் எப்சிஐ குடோன் அருகே திரண்டு வந்த போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை குண்டு வீசப்பட்டது. அதையும் மீறி போராட்டக்காரர்கள் சற்றும் தளராமல் போலீசார் மீது கற்களை வீசியவாறு முன்னேறிச் சென்றனர். அப்போது 3வது மைல் பைபாஸ் பாலத்திற்கு கீழ் நிறுத்தப்பட்டிருந்த 4 பைக்குகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை தீ வைத்து எரித்தனர். அங்கிருந்து கலெக்டர் அலுவலக வாயிலில் நுழைந்த போராட்டக் குழுவினருக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது.

எனினும் ஆவேசமாக முன்னேறிய போராட்டக்குழுவினர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் புகுந்து அங்கிருந்த அரசு வாகனங்கள், அரசு ஊழியர்களின் இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். கலெக்டர் அலுவலக வாயிலில் இருந்த கண்ணாடி ஜன்னல்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வாகனம், சுங்கத்துறை வாகனம், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் தீக்கிரையாகின. இதனால் கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்தில் இருந்த போலீசார் போராட்டக் குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து பின்வாங்கிய போராட்டக்காரர்கள் மீது போலீஸ் வாகனத்தின் மீது நின்றபடி போலீசார் எந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சிலர் துடிதுடித்து இறந்தனர். துப்பாக்கிச்சூட்டில் தேனி மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் (67), தூத்துக்குடி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கிளாஸ்டன் (40), சிலோன் காலனியை சேர்ந்த கந்தையா (55), தூத்துக்குடி பள்ளி மாணவி ஸ்நோலின் என்ற வெனிஸ்ட்டா (17), குறுக்குச்சாலையைச் சேர்ந்த தமிழரசன்(45), மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்த சண்முகம் (30), அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்த அந்தோனி செல்வராஜ் (35), தாமோதரநகரை சேர்ந்த மணிராஜ் (34), ஆகிய 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

பிற்பகலில் தூத்துக்குடி எஸ்பி திரேஸ்புரத்தில் ரோந்து சென்ற போது நடந்த மோதலில் 2வது முறையாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் வினிதா (32) என்பவர் பலியானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (20) என்பவர் நேற்று இரவு இறந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 10 ஆனது. பலர் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பலியானவர்களில் குறுக்குச்சாலையை சேர்ந்த பொன்னு என்பவரது மகன் தமிழரசன்(45) தூத்துக்குடி மாவட்ட புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட நிர்வாகி. மீட்கப்பட்ட உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி சூட்டை அடுத்து போராட்டக் குழுவினர் கலெக்டர் அலுவலக சாலை, பூங்கா வழியாக நான்கு புறங்களிலும் சிதறி ஓடினர். இந்த தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், சில தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்வீச்சு மற்றும் தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட போலீசாரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு தாக்குதலுக்குள்ளான பெண் காவலர் உயிருக்குப் போராடிவருகிறார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டம் கலவரமாக மாறியதை அடுத்து தூத்துக்குடி நகரமே ரணகளமாக காட்சியளித்தது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு தூத்துக்குடி வீதிகள் மயான அமைதியானது. ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்புக்கும் தீவைக்கப்பட்டது. மாலைக்கு பிறகு நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த போலீசார் தென் மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ், மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, ஊர் காவல் படை ஐஜி சண்முகராஜேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நகர் முழுவதும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும் துப்பாக்கி சூடு சம்பவத்தால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here