பல ஆறுகள் பெருக்கெடுப்பு;கொழும்பின் புற நகர்ப் பகுதிகளுக்கும் ஆபத்து!

0
194

நாட்டின் பல பகுதிகளிலும் நிலவும் சீரற்ற காலநிலையாலும் கடும் மழை தொடர்வதாலும் பல ஆறுகள் பெருக்கெடுத்து வரும் நிலையில் கொழும்பின் புற நகர்ப் பகுதிகளுக்கும் தற்போது பாரிய வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.

மலையகம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வரும் நிலையில், நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட ஆறுகள் பெருக்கெடுத்து வருவதனால் கொழும்பின் புறநகர் பகுதி வரை பாரிய வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று மாலை வரை ஹங்வெல்ல, கடுவலை, பியகம, களனி, மல்வான உட்பட்ட பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டிருந்ததுடன், அவிசாவளை, கொழும்பு பழைய வீதியில் கடுவலை பகுதியூடான வாகனப் போக்குவரத்துக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.

கடுவலை உட்பட கொழும்பின் புற நகர் பகுதிகள் பலவற்றுக்குள்ளும் வெள்ள நீர் எவ்வேளையிலும் புகலாம் என்ற அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் மழை பெய்யுமாகவிருந்தால் ஆறுகள் பெருக்கெடுக்க கொழும்பின் புற நகர் பகுதிக்கும் கொழும்புக்கும் பெரும் வெள்ள அச்சுறுத்தல் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சீரற்ற காலநிலையால் புத்தளத்திற்கும் நீர்கொழும்புக்கும் இடையில் மாதம்பை பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள அனைத்து வீதிகளும் மூடப்பட்டுள்ள நிலையில், ஆறுகளும் பெருக்கெடுத்து ஓடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரும் பயணிகள் சிலர் கடும் சிரமத்தை எதிர்நோக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, பியகம பகுதியும் நீரில் மூழ்கியுள்ளதால், அதிவேக வீதியின் கடுவலை வெளியேற்ற நுழைவாயிலில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனால் கடுவலை நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here