திரிபுராவில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 3000 குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்ந்து உள்ளனர்.
திரிபுராவில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்தது. கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் மண் சரிவு போன்ற விபத்து சம்பவங்கள் நேரிட்டு உள்ளது. இவ் விபத்து சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். தலைநகர் அகர்தலாவில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளன, மாநிலத்தில் உள்ள மூன்று ஆறுகளிலும் வெள்ளம் அபாயகட்டத்தை தாண்டி செல்கிறது.
வடக்கு திரிபுராவில் மழைப்பகுதியில் கனமழை பெய்தது, ஆறுகளில் தண்ணீர் அதிகரிப்பு நிலை தொடர்ந்து மோசமான நிலையிலே உள்ளது. மாநிலத்தில் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அசாம்- அகர்தலா தேசிய நெடுஞ்சாலையின் பெரும்பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளது, இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவியை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளும் நடைபெற்று வருகிறது. 36 இடங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ள முகாம்களில் 3000 குடும்பத்தாருக்கு இடம் வழங்கப்பட்டு உள்ளது.