சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

0
333

 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து;  மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும்
திருப்பங்கள் நிறைந்த சமர்களில் வீரகாவியம் படைத்து தங்களை ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 19.05.2018 சனிக்கிழமை அன்று செங்காளன் மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க  நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் சுடர்வணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலரஞ்சலி செலுத்தப்பட்ட சமவேளையில் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டன.

நடுகல் நாயகர்களாக தங்களை விதையாக்கிய பெருந்தளபதிகளையும், மாவீரப் போராளிகளையும் நினைவுகூரும் இவ் வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள், சிறுவர்களின் இனஉணர்வு மிக்க பேச்சுக்கள், கவிதைகள்;, காலத்திற்கேற்ப கருப்பொருளை கொண்ட சிறப்புரையும் இடம்பெற்றன.செங்காளன் மாநிலத்தில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வானது தமிழீழ விடுதலைக்கும் அதற்கான தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாடுகளுக்குமான மீள்தொடக்கப் புள்ளியாக அமையப்பெற்றதுடன் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமையானது மிகவும் உணர்வுபூர்வமாகவும், நம்பிக்கையைத் தருவதாகவும் அமைந்திருந்தது.நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலை மக்கள் எல்லோரும் சேர்ந்து பாடி, தமிழீழத் தேசியக்கொடி இறக்கலைத் தொடர்ந்து, தாரக மந்திரத்துடன் வணக்க நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நிறைவுபெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here