முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தமிழ் அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் ஒன்றிணைந்து வணக்கம் செலுத்தியுள்ளனர்.
தமிழர் நலம் பேரியக்கம் மற்றும் தமிழர் ஒன்று கூடல் நினைவேந்தல் நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவரின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படத்தை படகு வடிவில் அமைத்து அதனை இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் சுடரேற்றி முள்ளிவாய்க்கால் நோக்கி மிதக்க விட்டுள்ளனர்.
அச் சந்தர்ப்பத்தில் அங்கு கூடியிருந்த இளைஞர்கள் பெண்கள் குழந்தைகள் மற்றும் அனைவரும் தங்களது கைத்தொலைப்பேசிகளிலுள்ள விளக்குகளை வானத்தை நோக்கி அசைத்து இறுதிக் கட்ட போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றியும் கடலில் பூக்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்டவர்கள் “ஈழத்தில் உயிர் நீத்த அப்பாவி தமிழ் மக்களுக்கு உரிய நீதி வேண்டும்” “மீண்டும் தமிழ் ஈழம் மலர வேண்டும்” என கோஷங்களை எழுப்பினர் ..